“பிரமாண பத்திரத்தில் ரூ.10,000 இருப்பதாக கூறிவிட்டு ரேஞ்ச் ரோவர் காரில் செல்பவர்கள் நாங்கள் அல்ல” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

“பிரமாண பத்திரத்தில் ரூ.10,000 இருப்பதாக கூறிவிட்டு ரேஞ்ச் ரோவர் காரில் செல்பவர்கள் நாங்கள் அல்ல” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Updated on
2 min read

சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ள நிலையில், திமுகவின் 59 உறுப்பினர்களுக்கும் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறிவித்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் இடையில் கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “முதல்வர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வரே தெரிவித்துள்ளதால், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் முதல்வர் வழங்கும் வாகனத்தை பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம். அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவை குறைக்கும் நோக்கில், பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்எல்ஏக்களுக்கு மட்டுமே வாகனம் வழங்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: “எழ்மையான எம்எல்ஏக்கள் நிறைய பேருந்தில்தான் வந்து செல்கின்றனர். அவையை பொறுத்தவரை எல்லோரும் சமம் என்று முதல்வர் நினைக்கிறார். அது ஒரு மரபு. அமைச்சர்கள் எல்லோரிடமும் கார் உள்ளது. நாங்கள் யாரும் கார் கேட்கப்போவதில்லை. இது அடிப்படையான புரிதல். அரசியலாக நினைத்தால் இது அரசியல். ஏழ்மையானவர்கள் விண்ணப்பம் தருவார்கள். இது எம்எல்ஏக்களுக்கான உரிமை. அரசு வழங்கும் வாகனத்தில் சென்றால் ஒரு மரியாதை இருப்பதாக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவரிடம் 2,3 வீடுகள் உள்ளது. ஆனால், அரசு பங்களாவில் இருக்கிறார் அல்லவா? அவர் என்னிடம் தான் அரசுத் துறையின் வீடு வேண்டும் என்று கேட்டு கடிதம் தந்தார். எதிர்க்கட்சித் தலைவருக்கு 2,3 வீடுகள் இருப்பதால் அரசுத் துறை பங்களா தர முடியாது என்று கூற முடியுமா? உடனே கொடுத்தோம். இதுதான் மரபு. அமைச்சர்களுக்கு கார், வீடு தரப்படுகிறது. 4 உதவியாளர்கள் தரப்படுகின்றனர். எம்எல்ஏக்களுக்கு உதவியாளர்கள், வீடு கிடையாது.

நீங்கள், உங்கள் தேர்தல் பிரமாண பத்திரத்தில், கார் இல்லை, ரூ.10 ஆயிரம் தான் பணம் இருக்கிறது என்று கூறலாம். ஆனால், எங்கள் கட்சி எம்எல்ஏக்களில் சொந்த வீடு, கார் இல்லாமல் இருக்கின்றனர். முதல்வர் எல்லோருக்கும் கார் தருகிறார். தவெகவினரில் ஏற்கெனவே கார் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். அதுதான் எங்கள் நிலைப்பாடு. கார் என்பது ஆடம்பரமில்லை. அது தேவை. ஊழல் இல்லாத எம்எல்ஏக்கள் மக்களை சென்று பார்க்க கார் தேவை” என்றார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு: “எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் அந்தஸ்தில் இருப்பதால் அவருக்கு அரசு இல்லம் வழங்கப்படுகிறது. அது அவர் உரிமை. அரசு வீட்டில் இருந்து பணியை கவனிப்பதற்காக வீடு கேட்டு வாங்கியுள்ளார். கார் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். இதை தவிர்த்து விட்டு நாங்கள் கார் இல்லை.

ரூ.10 ஆயிரம் தான் உள்ளது என்று குறிப்பிட்டதாக கூறுகின்றனர். அப்படி என்றால் இது குறித்து கேஸ் போடுங்கள். தேர்தல் நேரத்தில் இருப்பதைத்தானே பிரமாண பத்திரத்தில் கூறுகிறோம். கார் வேண்டாம், செலவை குறைக்க வேண்டும் என்றுதானே கூறுகிறோம். அமைச்சர் சொந்த வீட்டில் இருக்கிறார். ஆனால் அரசாங்கம் அவரது வீட்டுக்கு வாடகை தருகிறது. அதை வேண்டாம் என்று எழுதிக் கொடுங்கள்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: “எம்எல்ஏக்களுக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான முயற்சி, ஆடம்பரம் என்ற கோணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். அரசின் நிதி நிலைமை எங்களுக்கும் தெரியும். இது ஆடம்பரம் அல்ல; அவர்களின் வேதனை. அத்தியாவசிய தேவை. தேர்தல் பிரமாண பத்திரத்தில் ரூ.10 ஆயிரம் தான் என்று சொல்லி ரேஞ்ச் ரோவர் காரில் செல்லும் ஆட்கள் நாங்கள் இல்லை.”

டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): “கோரிக்கை வைத்துள்ள எம்எல்ஏக்களுக்கு கார் தரட்டும். ஆனால், எம்எல்ஏக்களுக்கு கார் தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு.”

கணேஷ்குமார் (பாமக): “பொருளாதாரத்தில் பின்தங்கிய எம்எல்ஏக்களுக்கு மக்கள் பணி செய்வதற்கு கார் அவசியம். பொருளாதாரத்தில் பின்தங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு வழங்கலாம்.”

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: “இது அரசியல் செய்வதற்காக அல்ல. கஜானாவை துடைத்து விட்டு சென்றார்கள் என்றுதான் தொடர்ந்து இவர்கள் வைக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்தையும் இலவசமாக திமுக கொடுக்கிறது என்று குற்றம்சாட்டிவிட்டு, தற்பொழுது நீங்களும் காரை இலவசமாக கொடுக்கிறீர்கள். அது முதல்வரின் உரிமை.

தேர்தல் அஃபிடவிட்டில் கார் இல்லை என்று குறிப்பிட்டுள்ளவர்களுக்கு கார் வாங்கித் தாருங்கள் என்பதுதான் எங்கள் ஆலோசனை.”

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

“பிரமாண பத்திரத்தில் ரூ.10,000 இருப்பதாக கூறிவிட்டு ரேஞ்ச் ரோவர் காரில் செல்பவர்கள் நாங்கள் அல்ல” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
“ஜெயலலிதா உருவச் சிலை முறையாக பராமரிப்பு” - பேரவையில் அமைச்சர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in