“ஜெயலலிதா உருவச் சிலை முறையாக பராமரிப்பு” - பேரவையில் அமைச்சர் விளக்கம்

“ஜெயலலிதா உருவச் சிலை முறையாக பராமரிப்பு” - பேரவையில் அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: “மெரினா - உயர் கல்வி மன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவச் சிலை முறையாக பராமரிக்கப்படுகிறது” என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் இன்று (ஆக.21) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் பேசும்போது, “மெரினா கடற்கரையில் தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

ஜெயலலிதா பிறந்தநாளில் மட்டும் அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் பராமரிப்பின்றி கிடக்கிறது. அதனால், ஜெயலலிதாவின் சிலைக்கு தினமும் எங்கள் செலவிலேயே மாலை அணிவிக்க விரும்புகிறோம். இது குறித்து முதல்வரிடமும் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதை நிறைவேற்றித் தர வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முக்கியத்துவத்தை இந்த அரசு என்றும் இழக்க விடாது. ஜெயலலிதாவின் சிலை, ரூ.60 லட்சத்தில் சென்னை உயர் கல்வி மன்ற வளாகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதை அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். இந்தச் சிலையை கடந்த 2022-ம் ஆண்டு முதல் செய்தி, மக்கள் தொடர்பு துறை இயக்குநரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் செய்தி மக்கள் தொடர்பு துறையால் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் சிலை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்தார்.

“ஜெயலலிதா உருவச் சிலை முறையாக பராமரிப்பு” - பேரவையில் அமைச்சர் விளக்கம்
கொசஸ்தலை ஆற்றில் 2,150 கிலோ மீன்கள் இறப்பு: குழு அமைத்து 10 நாளில் அறிக்கை அளிக்க உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in