திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல அனுமதிக்கக் கோரி 2-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்த போலீஸார். | படங்கள்: நா.தங்கரத்தினம் |
திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு கொடியேற்றம்: 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் கைது
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நேற்று சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, தங்களையும் மலைக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி 2-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை நடத்துவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விதிமுறைகளைப் பின்பற்றி விழா நடத்த அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மலையில் உள்ள தர்காவுக்குச் சென்று, விழாவுக்கான முன்னேற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் மேற்கொண்டனர். அப்போது, அடிவாரத்தில் உள்ள கோட்டைத் தெரு பெண்கள், தங்களையும் மலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், மலைக்குச் செல்லும் பழனி ஆண்டவர் கோயில் பாதை, கிரிவலச் சாலையில் உள்ள படிக்கட்டு பாதையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, கோட்டைத் தெருவைச் சேர்ந்த பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் தீபச் சட்டிகளை ஏந்தியபடி, பழனி ஆண்டவர் கோயில் அடிவாரப்பாதை நுழைவுப் பகுதியில் 2-வது நாளாக நேற்று திரண்டனர்.
மதுரை திருநகரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினர்.
தர்கா நிர்வாகிகளை மலைக்குச் செல்ல அனுமதித்தால், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார், திருநகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அவர்களை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். முருகனின் தல விருட்சமான கல்லத்தி மரத்தில் தர்கா நிர்வாகம் கொடி ஏற்றியுள்ளது.
அதை உடனடியாக அகற்ற வேண்டும். சிக்கந்தர் பாதுஷாவுக்கு கோரிப்பாளையம் தர்காவில் கல்லறை உள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. ஒருவருக்கு எப்படி 2 இடங்களில் கல்லறை இருக்க முடியும்.
இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்” என்றார். இதற்கிடையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி, பாஜக மாவட்டத் தலைவர் மாரி சக்ரவர்த்தி தலைமையில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் திருநகர் 2-வது பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று இரவு கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.
