

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், ஆறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், இன்று குளங்களில் ஆடிப்பெருக்கு விழாவினை பெண்கள் கொண்டாடி வழிபாடு செய்தனர்.
காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அந்த நீரால் தானியங்கள் விளைந்து பொதுமக்களுக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருக்கவும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரியின் கடைமடை மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. இந்த சூழலில், மாவட்டத்தில் உள்ள புனித குளங்களில் பெண்கள் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தினர்.
திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான கமலாலய கரையில் பெண்கள் உற்சாகமாக ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். புதுமண தம்பதிகளும், பெண்கள், சிறுவர்கள் என பலரும் திரண்டு வந்து குளக்கரையில் பழங்கள், அரிசி போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி தீபாராதனை காண்பித்து பின்பு நீரில் விட்டனர்.
குறிப்பாக, விவசாயிகளும் இந்த நாளில் வழிபாடு நடத்தி சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவார்கள். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் இதுவரை அணை திறக்கப்படவில்லை.
இதனால் ஆறுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் குளங்களில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றாலும் தற்போது கர்நாடகத்தில் கபினி அணை நிறைந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரத் தொடங்கி இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வழிபாடு செய்தனர்.