“காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைப் போல தமிழக அரசு செயல்படவில்லை” - இபிஎஸ்

“காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைப் போல தமிழக அரசு செயல்படவில்லை” - இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: ‘கர்நாடகாவில் உள்ள அரசாங்கம் அங்குள்ள அரசியல் கட்சிகளையும், விவசாயிகளையும் மதிக்கிறது. இங்கிருக்கும் அரசாங்கம் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, ‘விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணக்குகின்றேன். காவிரி விவகாரத்தில் இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்றே தெரியவில்லை.

காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுத்தேன்.

தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், இந்த அரசு அதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை, பொருட்டாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.

கடந்த காலங்களில் அதிமுக, திமுக ஆட்சிகளில் காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டு, சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு நிரந்தர தீர்வை அதிமுக ஆட்சியில் பெற்றோம். அந்த தீர்ப்பை கூட இந்த அரசு காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளது.

கர்நாடகாவில் உள்ள அரசாங்கம் அரசியல் கட்சிகளையும், விவசாயிகளையும் மதிக்கிறது. இங்கிருக்கும் அரசாங்கம் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்த அரசுக்கு எந்த அனுபவமும் கிடையாது. இந்த கட்சி ஆரம்பித்தே இரண்டே கால் வருடம் தான் ஆகிறது. அதிமுக, திமுக ஆட்சிகளில் காவிரி பிரச்சினைகளில் எவ்வளவு போராட்டங்களை நடத்தியுள்ளோம் என்பது மக்களுக்கு தெரியும். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அதிமுக செயற்குழு கூட்டப்படும்’ என்று தெரிவித்தார்.

“காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைப் போல தமிழக அரசு செயல்படவில்லை” - இபிஎஸ்
காவிரி விவகாரத்தில் குறுகிய மனப்பான்மையை தவெக தவிர்க்க வேண்டும்: ரகுபதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in