

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனி பிரிவில், தினசரி ஏராளமானோர் வந்து தங்கள் பிரச்சினைகளை கோரிக்கை மனுவாக அளிப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி (32) என்பவர் தலைமை செயலகம் வந்தார்.
தலைமைச் செயலகம் உள்ளே செல்ல அனைவரும் காவல்துறையின் சோதனைக்காக நின்று கொண்டிருந்த போது, சாமுண்டீஸ்வரி திடீரென தனது தலையிலும், உடலிலும் டீசலை ஊற்றிக் கொள்ள முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், உடனடியாக சென்று அப்பெண்ணை தடுத்து நிறுத்தினர்.
அவரிடமிருந்த டீசல் கேனைப் பறிமுதல் செய்த போலீஸார், அவர் மீது தண்ணீரை ஊற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, தற்கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், அவரை கைது செய்த போலீஸார், கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், சாமுண்டீஸ்வரி ஏற்கனவே தனது தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்ததாகவும், அந்தப் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் மன உளைச்சல் காரணமாகவே, அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்தது.