

சென்னை: பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தனியார் பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை சி.எம்.பி.டி. காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் மாலை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கோயம்பேடு ஆர்ச் அருகே தனியார் பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் இறங்கிய பெண் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டார்.
அவரைப் பிடித்து போலீஸார் சோதனை செய்தபோது, உடைமைகளில் மறைத்து வைத்திருந்த 6 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கங்காதேவி (38) என்பது தெரியவந்தது.
அவர், டெல்லியில் பிரீத்தி என்பவரது வீட்டில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. பிரீத்தி கொடுத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, ஒடிசா சென்று கஞ்சாவை வாங்கி வருமாறு கங்கா தேவியிடம் அவர் கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி ஒடிசா சென்று கஞ்சாவை வாங்கிய கங்காதேவி, பின்னர் சென்னையை அடுத்த செங்குன்றம் பேருந்து நிலையத்துக்கு வந்து அங்கிருந்து தனியார் பேருந்தில் கோயம்பேடு வந்துள்ளார்.
கோயம்பேட்டில் இருந்து கஞ்சாவை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றபோது போலீஸாரிடம் சிக்கி உள்ளார். இதையடுத்து, கங்காதேவியை கைது செய்த போலீஸார் கஞ்சாவை கொடுத்தவர்கள், கடத்தல் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.