

காத்மாண்டு: நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் வெளிநாட்டு மீட்பு குழுக்களை அந்த நாடு நிராகரித்து உள்ளது. நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ள நிலையில், மாயமான நூற்றுக்கணக்கானோரை தேடும் பணியில் மீட்பு குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மிகவும் மோசமான பேரிடரை எதிர்கொண்டுள்ள நேபாளத்துக்கு பல்வேறு நாடுகளும் உதவிகளை வழங்கி வருகின்றன. முதல் நாடாக இந்தியா 10 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக 37 டன் நிவாரண பொருட்களுடன் 2-வது விமானத்தை நேற்று முன்தினம் அனுப்பியது. இதேபோல பல நாடுகளும் நேபாளத்துக்கு நிவாரண உதவியும், நிதி உதவியும் வழங்க முன்வந்துள்ளன.
அதே நேரத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக மீட்பு குழுக்களை அனுப்ப இந்தியா, அமெரிக்கா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்த நிலையில் நேபாளம் அதை நிரகாரித்துவிட்டது.
தங்கள் நாட்டின் ராணுவம், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஆற்றலும், திறமையும் இருப்பதாகவும், எனவே வெளிநாட்டு உதவி தேவையில்லை என்றும் பிரதமர் பாலேந்திர ஷா அரசு முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக,“உதவி கோருவது இயல்பானது. எங்கள் பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைக்கு எங்களுக்கு அத்தகைய உதவி தேவையில்லை,” என்று நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லோக் பகதூர் சேத்ரி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
என்ன காரணம்?
நேபாள அரசின் இந்த முடிவிற்கு கடந்த காலத்தில் கற்ற பாடமே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டு நேபாளம் இதேபோன்று மிகப்பெரிய பேரிடரை சந்தித்தது. 2015 ஏப்ரல் 25-ம் தேதி கோர்கா மாவட்டத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்தனர். 23,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைதொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் தங்களது மீட்பு குழுக்களை நேபாளத்துக்கு அனுப்பின. ஏராளமான ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நேபாளத்தில் குவிந்தன. இதனால் நேபாள அரசு கடுமையான தளவாட மற்றும் நிர்வாக அழுத்தங்களுக்கு உள்ளனாது.
வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கிடையேயான போட்டி மற்றும் அவர்களின் நகர்வுகளை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட சிரமங்கள், ஏற்கனவே விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் தகவல்தொடர்பு அமைப்புகள் கடும் அழுத்தத்தில் இருந்த சூழலில் நிலைமையை நிர்வகிப்பதை மேலும் சிக்கலாக்கியது. இதனை கருத்தில் கொண்டே இந்த முறை வெளிநாட்டு மீட்பு குழுக்களின் வருகையை நேபாள அரசு நிராகரித்துள்ளது.
நிதி உதவியை கோருகிறது
இருப்பினும், நேபாளம் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவியை நாடுகிறது. குறிப்பாக மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளின் போது மேலும் நிதி மற்றும் பொருள் சார்ந்த உதவிகளை நாட அந்நாடு எதிர்பார்க்கிறது. சில நாடுகள் ஏற்கனவே நிதியுதவியை அறிவித்துள்ளன. மற்ற நாடுகள் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்கும் நன்கொடைகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் உலக வங்கி ஆகியவையும் நிதி உதவியை அறிவித்துள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா, “உடனடி அவசரகால உதவிக்கு அப்பால், சிறந்த இடர் மதிப்பீடுகள், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க உதவும் வலுவான உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் தயார்நிலையையும் மீள்திறனையும் வலுப்படுத்த நேபாளத்திற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்” என தெரிவித்துள்ளார்.