

ஆதவ் அர்ஜுனா
சென்னை: “காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுடன் கூட்டணி இல்லையென்றால் திமுக 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது. இப்போதே மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். அதற்கு பாஜகவின் ஆதரவும் உள்ளது” என பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகி விஜயதரணி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன், முன்னாள் எம்எல்ஏ ரவி, திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 26 கட்சிகளோடு கூட்டணி வைத்தது, அதிமுக 10 கட்சிகளோடு கூட்டணி வைத்தது. தவெக தனித்துவிடப்பட்டது என்றார்கள். ஆனால், 1967-க்கு பிறகு மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை தவெக உருவாக்கியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக 1967-ல் அண்ணா ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார். அண்ணாவின் மறைவுக்கு பிறகு எம்ஜிஆர் உதவியுடன் கருணாநிதி முதல்வரானார்.
உதவி செய்தவர்களை தூக்கி எறிந்ததுதான் கருணாநிதி குடும்பத்தின் வரலாறு. அப்படி எம்ஜிஆர் தூக்கியெறியப்பட்டு, தனியாக வெளியே வந்தார். அதிகார பலத்தோடு இருந்த திமுகவை எதிர்த்து 1977-ல் எம்ஜிஆர் வென்றார். கருணாநிதியிடம் உண்மை இல்லை, எம்ஜிஆரிடம் உண்மை இருந்தது. அதனால்தான் எம்ஜிஆர் வென்றார். பின்னர் எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை திமுக வெல்லவே முடியவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெகவை எல்லோரும் கிண்டல் செய்தனர். சாதிய பின்புலம், பண பலம் இல்லாமல் சாமானிய வேட்பாளர்களை நிறுத்தினோம். எம்ஜிஆருக்கு பின்னர் விஜய் மிகப் பெரிய புரட்சியை உருவாக்குவார் என்று நாங்கள் நம்பினோம். விஜய்யின் தாக்கத்தை உணரவே இல்லை என இப்போது திமுக தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.
எம்ஜிஆரின் கனவும், ஜெயலலிதாவின் கனவும், தவெகவின் கனவும் ஒன்று. இந்த ஊழல் குடும்பத்தை தூக்கியெறியவே அவர்கள் இருவரும் கடைசி வரை கஷ்டப்பட்டனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர், திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தினர். திமுகவின் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும், அவரின் மகன் மிதுனும் சேர்ந்து இவர் முதல்வரா, அவர் முதல்வரா என ஒரு மிகப் பெரிய சூழ்ச்சியை செய்தனர். அது நடந்ததா இல்லையா? இதனால்தான் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகதான் எதிர்காலம் என நினைத்து நம் கட்சியில் இணைந்தனர்.
இன்னும் 25, 30 ஆண்டுகளுக்கு தவெகதான் எதிர்காலம் என நினைத்து அதிமுகவினர் தவெகவில் இணைந்து வருகின்றனர். கொளத்தூரில் ஸ்டாலினுடைய தோல்வியை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால், எடப்பாடியில் ஒருவர் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றார். செங்கோட்டையனின் பொறுப்பில் எடப்பாடி தொகுதிக்கு ஒரு வேட்பாளரை தலைவர் தேர்ந்தெடுத்து அனுப்பினார். ஸ்டாலினின் தோல்வி உண்மையான தோல்வி. மூத்த தலைவர் தோல்வியுற்றதை நாங்கள் எள்ளி நகையாடவில்லை.
எடப்பாடியில் தவெக சார்பில் போடப்பட்ட வேட்பாளரை விலை கொடுத்து வாங்கினார் பழனிசாமி. எடப்பாடி தொகுதியில் விசில் சின்னம் நின்றிருந்தால், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வென்றிருக்கும். இதுபோல எந்த வேட்பாளரையாவது எந்த தலைவராவது விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்களா? அதன்பின்னர் சுயேட்சை வேட்பாளருக்கு தலைவர் விஜய் கடைசி நாளில் ஆதரவளித்தார். அப்போதும் எடப்பாடி தொகுதியில் முதல் 5 ரவுண்டுகளில் தவெக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் தான் முன்னிலை பெற்றார்.
தவெக குதிரை பேரம் செய்வதாக சொல்கிறார் பழனிசாமி. உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தான் அதிமுகவினர் எங்களிடம் வருகின்றனர். எங்களிடம் சொல்லாமல் தவெகவோடு சென்றுவிட்டார்கள் என கூட்டணி கட்சிகளை ஸ்டாலின் சொல்கிறார். அவர்கள் ஏன் உங்களிடம் கேட்க வேண்டும்?
திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தின் இதுபோன்ற பண்ணையார்த்தனத்தால் தான் அக்கட்சி தோற்றது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுடன் கூட்டணி இல்லையென்றால் திமுக 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது.
30 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவால் செய்ய முடியாததை முதல்வர் விஜய் செய்துள்ளார். முதல்வர் ஃபண்ட் வேண்டாம் என சொல்லி, ஊழலை ஒழித்துள்ளார். பதிவுத் துறை உள்ளிட்ட எந்த துறையிலும் இப்போது ஊழல் இல்லை. முதல்வர் வழியை பின்பற்றி அமைச்சர் ஃபண்ட்-களும் வசூலிக்கப்படுவதில்லை. ஒன்றிரெண்டு இடங்களில் தவறுகள் நடக்கும்போது பொதுச் செயலாளர் உடனடியாக அவர்களை கட்சியை விட்டு நீக்கிவிடுகிறார். மக்களின் பணத்தை யாரும் தொடக் கூடாது.
மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் இப்போதே ஒன்று சேர்ந்துவிட்டார்கள். இவர்கள் இருவரும் தவெக அரசுக்கு எதிராக ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிடுகிறார்கள். பழனிசாமியின் அறிக்கைகள் அறிவாலயத்தில் தான் அச்சிடப்படுகிறது. இருவரும் இணைந்துவிட்டார்கள், அதற்கு பாஜகவின் ஆதரவும் உள்ளது. திமுகவும், அதிமுகவும் ஒன்று சேர்ந்தாலும் கூட, தவெக 60 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெறும். இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில், ஏன் ஒரு பூத்தில் கூட முன்னிலை பெற்று காண்பிக்குமாறு அதிமுகவுக்கு சவால் விடுகிறேன்.
எனக்கு எதிராக பல்வேறு பொய் பரப்புரைகளை திமுக பரப்புகிறது. அதெல்லாம் முழுக்க பொய். திமுக ஆட்சி போன பின்னர், ரெட் ஜெயன்ட்-டின் ஆதிக்கம் ஒழிந்துவிட்டது. திரையுலகினர் நிம்மதியாக வேலை செய்கின்றனர். திமுகவும் அதிமுகவும் ஒன்று சேர்ந்துவிட்டது என சொல்கிறோம். வேண்டுமானால் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என பழனிசாமியும், ஸ்டாலினும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.