

சென்னை: இந்தாண்டு காற்றாலை மின் உற்பத்தியில் புதிய உச்சத்தை தமிழகம் அடைந்துள்ளது.
36-வது முறையாக 100 மில்லியன் யூனிட்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு அதிக காற்றாலை மின் கட்டமைப்பை கொண்டுள்ளது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் தற்போதைய நிலவரப்படி, 9,500 மெகா வாட் திறனில், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை பண்ணைகளில் ஒன்றான முப்பந்தல் காற்றாலை பண்ணை கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு மே மாதம், காற்றாலை சீசன் தொடங்கியதில் இருந்து, காற்றாலைகளில் தினமும் சராசரியாக, 80 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கப்பெற்றது. தற்போது இந்தாண்டுக்கான காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.
அதன்படி, நடப்பாண்டு மட்டும் 36-வது முறையாக தினசரி மின் உற்பத்தி 100 மில்லியன் யூனிட்டை கடந்து, கடந்த 2025-ம் ஆண்டில் எட்டப்பட்ட 35 முறை என்ற சாதனையை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3,291 மில்லியன் யூனிட்: கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மின்வாரியம் மொத்தமாக 8,491 கோடி மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரத்தை பெற்றுள்ளது.
ஜூலை மாதம் மட்டும் 3,291 மில்லியன் யூனிட் மின்சார தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுவதால், காற்றாலை மின் உற்பத்தி மிக அதிக அளவை எட்டும் என தகவல் வெளியாகி உள்ளது.