

ஆர்.பி.உதயகுமார், எம்.மணிமாறன்
மதுரை: 2009 இடைத்தேர்தலுக்குப் பிறகு திருமங்கலம் தொகுதியில் வெற்றிபெறாத திமுக, இந்த முறை சேடபட்டி முத்தையா மகன் மணிமாறனை வெற்றிபெற வைக்க முதல்வரின் மருமகன் சபரீசனே நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
மூன்றாவது முறையாக களமிறங்கும் அதிமுகவின் ஆர்.பி.உதயகுமாருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைத்தேர்தல் வரலாற்றில் திருமங்கலம் புதிய பார்முலாவை ஏற்படுத்திய தொகுதி. 2009-ல் நடந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருட் கள், பணம் என்ற மோசமான வரலாறு உருவானது.
அந்தத் தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவில் திமுக வேட்பாளர் லதா அதியமான் வெற்றிபெற்றார். அதன்பிறகு ஒருமுறைகூட திமுகவால் இத்தொகுதியில் வெற்றிபெறவே முடியவில்லை. கடைசியாக நடந்த 3 தேர்தல்களிலும் அதிமுகவே வென்றது.
அதில் இருமுறை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக அவர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார்.
இத்தொகுதியில் தான் போட்டியிடுவதை உறுதி செய்த ஆர்.பி.உதயகுமார், கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே தொகுதியில் முகாமிட்டு நலத்திட்ட உதவிகள், மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்து போராடுவது, கோயில் திருவிழாக்களுக்கு நன்கொடை அளித்துப் பங்கேற்பது, தொகுதி மக்கள், கட்சிக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, ‘பூத்’ கமிட்டி அமைத்து தேர்தல் பணியை மேற்கொள்வது என்று ஏதாவது ஒருவகையில் சந்தித்துக் கொண்டே வருகிறார்.
அதனால், திருமங்கலம் தொகுதி தேர்தல் பணிகளை எதிர்கொள்வது அவருக்கு மிக எளிதாக உள்ளது. ஜெயலலிதா மீது மிகுந்த விசுவாசம் கொண்ட ஆர்.பி.உதய குமார், அவரது மறைவுக்குப் பிறகு டி.குன்னத்தூரிலே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டி வழிபடுகிறார். தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக இந்த நினைவு மண்டபத்திலேயே தங்கிவிட்டார்.
திருமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் போட்டியிட உள்ளார். இந்த முறை இவரை எப்படியாவது வெற்றிபெற வைக்க முதல்வரின் மருமகன் சபரீசனே களமிறங்கி தேர்தல் ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார்.
எப்படியும் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்று தேர்தல் பணிகளில் மணிமாறனும் தீவிரம் காட்டி வருகிறார். மக்களுக்கு பரிசு பொருள், பிரியாணி என ஆர்.பி.உதயகுமார் பாணியை இவரும் தொடர்கிறார்.
வாக்காளர்களின் ‘கவனிப்பு’ விஷயத்தில் தாராளம் காட்டவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவினர் என்ன செய்தாலும், அதற்கு ஒரு படி மேலாகவே கவனிப்பு விஷயத்தை நாமும் செய்வோம் எனக்கூறி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார் உதய குமார்.
இதனால், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி பொதுத் தேர்தல், மற்றொரு இடைத் தேர்தல் போல் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்பே களைகட்டத் தொடங்கி உள்ளது. பலத்த போட்டி காரணமாக இத்தொகுதியை சுற்றி அதிகாரி களின் சோதனை உள்ளிட்ட நட வடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. எனினும் திமுக பக்கம் அதிகாரிகள் பயத்துடனேயே அணுகுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.