

கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களும் அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராக வசதியாக ஆண்டுதோறும் வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை கடந்த 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் உட்பட மொத்தம் 6 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்பும் எப்போது வெளியிடப்படும், தேர்வுகள் நடைபெறும் நாள் ஆகிய விவரங்களும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, முதலாவது தேர்வாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப்பணிகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்) உள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டு தேர்வு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இதனால், வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களிடையே எழுந்துள்ளது.
ஒருவேளை தேர்வு முறையில் மாற்றம், புதிய பாடத்திட்டம் போன்ற நடைமுறைகள் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தள்ளிப்போகுமோ என்றும் அவர்கள் அச்சப்படுகிறார்கள். அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறது. எனவே அரசுப் பணி நியமனம் தொடர்பாக புதிய அரசு எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.