ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமா தவெக அரசு?

ரூ.733 கோடி மதிப்பிலான திட்டமும் பின்புலமும்
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமா தவெக அரசு?
Updated on
2 min read

ராமேசுவரம்: ரூ.733 கோடி மதிப்பிலான ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு முழு ஒத்துழைப்பு அளித்தால், விரைவில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு 1914 பிப்ரவரி 24-ம் தேதி போர்ட் மெயில் ரயில் சேவை துவங்கப்பட்டது. மேலும் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு பயணிகள் கப்பலும் இயக்கப்பட்டது.

இந்த ரயில் சேவையின் பொன்விழா ஆண்டில் 1964 டிசம்பர் 22 அன்று, தனுஷ்கோடியை தாக்கிய புயலில் ரயில்வே நிலையத்திலும், துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தனுஷ்கோடிக்கு வந்து கொண்டிருந்த போர்ட் மெயிலில் பயணம் செய்த 200-க்கும் மேற்பட்ட பயணிகளும் உயிரிழந்தனர்.

இந்த புயலினால் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையேயான ரயில் பாதை முற்றிலும் அழிந்து போனது. இதனால் தனுஷ்கோடிக்கு பதிலாக ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது.

தனுஷ்கோடியை புயல் தாக்கி 55 ஆண்டுகள் கழித்து ரயில்வே அமைச்சகம் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை 17.20 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க முடிவு செய்து சர்வே பணிகளை மேற்கொண்டது.

கன்னியாகுமரியில் 1.3.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி ரூ.208 கோடியில் புதிய தனுஷ்கோடி ரயில் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

ரூ.208 கோடியில் இருந்து ரூ.733 கோடி:

பின்னர், சென்னை ஐஐடியை சார்ந்த பொறியாளர்கள் தனுஷ்கோடிக்கான ரயில் பாதையை ஆய்வு செய்து ரயில் பாதையை புயல், கடல் காற்று மற்றும் மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க சாலை மட்டத்திலிருந்து ஐந்து மீட்டர் உயரத்துக்கு பரிந்துரைத்தனர்.

1964-இல் புயல் தாக்கியபோது அப்போதைய ரயில் தண்டவாளங்கள் சாலை மட்டத்தில் இருந்து ஒரு மீட்டருக்கும் குறைவான அளவில் இருந்தது. இதனால் தனுஷ்கோடிக்கான புதிய ரயில்வே பாதைக்கான நிதி தேவை ரூ.208 கோடியில் இருந்து சுமார் ரூ.733 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதிகள் உள்ளதால், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான புதிய ரயில் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியதுடன், தனுஷ்கோடியில் இந்த புதிய ரயில் பாதையினால் கடலோர சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையேயான புதிய ரயில் பாதை திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையேயான புதிய ரயில் பாதை 17.20 கி.மீ தொலைவுக்கு ஒற்றை வழித்தடத்தில் மின்மயமாக்கப்பட்டு அகல ரயில் பாதையாக அமையும். இதில் ஜடாயு தீர்த்தம், கோதாண்ட ராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய புதிய ரயில் நிலையங்களும் அமைக்கப்படும்.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையேயான பழைய ரயில் பாதையில் 28.6 ஹெக்டேர் வனத்துறையிடம் உள்ளது. மேலும் 43.81 ஹெக்டேர் மாநில அரசுக்கு சொந்தமான நிலம் மற்றும் 3.66 ஹெக்டேர் தனியாருக்குச் சொந்தமான நிலமும் தனுஷ்கோடி ரயில்வே பாதைக்காக கையகப்படுத்தப்பட வேண்டும்.

கடலோர சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி கடந்த திமுக அரசு இந்த ரயில் பாதைக்கு ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய தவெக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதைக்கான பணிகள் துவங்கும்” என்றனர்.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமா தவெக அரசு?
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா... தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in