திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா?

ஆதரவு, எதிர்ப்பு போராட்ட அறிவிப்புகளால் தொடங்கிய பரபரப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூண் | கோப்புப் படம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் | கோப்புப் படம்

Updated on: 
2 min read

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நவ. 17-ல் விசாரணைக்கு வரும் நிலையில், தீபம் ஏற்றுவது தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் ஆதரவு, எதிர்ப்பு போராட்ட அறிவிப்புகளால் மதுரையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் ராம ரவிகுமார் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கார்த்திகை நாளில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என 2025 டிச. 1-ம் தேதி உத்தரவிட்டார்.

ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உச்சிப் பிள்ளை யார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங் குன்றத்தில் 144 தடையாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, 144 தடையாணையை ரத்து செய்ததுடன் மனுதாரர்கள் உள்ளிட் டோரை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் இந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை இரு நீதிபதிகள் அமர்வு 2026 ஜனவரி 6-ல் தள்ளுபடி செய்தும், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தும், ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதுவரை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனிடையே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தீபத்தூணில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். மற்றவர்களை அங்கு அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டதை திருத்தம் செய்து, குறிப்பிட்ட தூரம் வரை பக்தர்களை அனுமதிக்க உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என சிக்கந்தர் தர்ஹா தரப்பில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அறநிலைய துறையும் நிராகரிப்பு

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது மரபல்ல. அருகே தர்ஹா உள்ளது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கே.கே.ரமேஷ், கடந்தாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற மாநில போலீஸார் அனுமதிக்காததால், இந்தாண்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை பாதுகாப்பு பணியில் நியமிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசின் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் நவ.17-ல் விசாரணைக்கு வரவுள்ளது.

அப்போது திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான அனைத்து மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு இந்தாண்டு கார்த்திகை தீப நாளான நவ.24-க்குள் தீர்ப்பு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திகை தீப தினத்துக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப பரபரப்பு தொடங்கியுள்ளது. கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் கார்த்திகை தீப ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வெளியாக வேண்டியும் பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி நேற்று வழிபாடு நடத்தினர்.

திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும், தர்கா இடத்தில் தீபம் ஏற்றக்கூடாது என வலியுறுத்தி மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் அமைதி-மதநல்லி ணக்க மாநாடு நேற்று நடத்தப்பட்டது.

இந்து முன்னணி நவ. 18-லும், இந்து மக்கள் கட்சி 22-ம் தேதியும் போராட்டங்களை அறிவித்துள்ளன. பிரதான மனுதாரர் ராம ரவிகுமார் கூறுகையில், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரிய வழக்கில் தனி நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அந்த உத்தரவுகள் அமலில் உள்ளன.

இதனால் தீபத்தூணில் தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை. தீபம் ஏற்றினால் மதக்கலவரம் வரும் என்பது கற்பனைக்கதை என நீதிபதிகளே தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவு உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்படும். இந்தாண்டு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது உறுதி, என்றார்.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றம் தீபத்தூண் | கோப்புப் படம்</p></div>
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கம்

X