

சென்னை: சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி கடந்த 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 525 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 40 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், நாளை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்து 545 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் (06007) அதிவிரைவு சிறப்பு ரயில், நவ.14-ம் தேதி (இன்று) மாலை 4.10 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை வழியாக மறுநாள் (15-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக, திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் (06008) அதிவிரைவு சிறப்பு ரயில் நாளை (15-ம் தேதி) இரவு 10.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நவ.16-ம் தேதி மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.