

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் துறைமுக தொகுதியாக குளச்சல் விளங்குகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தனித்துவம் பெற்ற இத்துறைமுகம், அன்னிய செலாவணியை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது.
இத்தொகுதியில் 17 சதவீதத்துக்கு மேல் மீனவர்கள் உள்ளனர். எனவே, அனைத்து தேர்தல்களிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மீனவர்களின் வாக்குகளே. நாடார் சமுதாயத்தினர் அதிகளவில் வசித்தாலும், இந்து, கிறிஸ்தவர் என இச்சமூகத்தினரின் வாக்கு பிரிகிறது. மேலும், கிருஷ்ணவகை மற்றும் விஸ்வகர்மா சமூகத்தினர், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் என பரவலாக வாக்குகள் உள்ளன. இதற்கேற்பவே வேட்பாளர்களை கட்சியினர் களம் இறக்குகின்றனர்.
குளச்சல் தொகுதியில் இம்முறை சுயேச்சைகள் உட்பட 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட், கிறிஸ்தவ மீனவ சமூகத்தை சேர்ந்தவர். இந்து நாடார் சமூகத்தை சேர்ந்த சிவகுமார் பாஜகவிலும், கிறிஸ்தவ நாடாரான பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் தவெகவிலும், சிஎஸ்ஐ நாடாரான ஆன்சி ஷோபா நாம் தமிழர் கட்சியிலும் போட்டியிடுகின்றனர்.
அதீத நம்பிக்கையில் தாரகை கத்பர்ட்
மீனவ சமூகத்தை சேர்ந்த லூர்தம்மாள் சைமன் 1957ல் நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சரானார். அதன் பின்னர், இத்தொகுதியில் மீனவ சமூகத்தை சேர்ந்த தாரகை கத்பர்ட்டை இம்முறை காங்கிரஸ் கட்சி களம் இறக்கியுள்ளது.
இதனால், குளச்சல் தொகுதியில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், திமுக கூட்டணி கட்சியினரின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாரகை கத்பர்ட் உள்ளார்.
பாஜக சிவகுமார்
குளச்சல் தொகுதியில் அதிகமுள்ள இந்து நாடார்கள், கிருஷ்ணவகை, விஸ்வகர்மா சமுதாயத்தினர் உள்ளிட்ட இந்துக்களின் வாக்குகளை நம்பிபாஜக இத்தொகுதியில் ஒவ்வொரு முறையும் களம் காண்கிறது.
கடந்த 3 தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவகை சமுதாயத்தைச் சேர்ந்த ரமேஷ், 3 முறையும் தோல்வியடைந்தார். இம்முறை, இந்து நாடார் சமுதாயத்தை சேர்ந்த சிவகுமாருக்குக், பாஜக வாய்ப்பு தந்துள்ளது.
இந்த அதிருப்தியில் கிருஷ்ணவகை சமுதாயத்தவரான கருப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சுயேச்சையாக புல்லாங்குழல் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால், கிருஷ்ண வகை சமுதாய வாக்குகள் பிரியும் சூழல் உள்ளது. எனினும், தாமரை சின்னத்துக்கு என குறிப்பிட்ட வாக்கு வங்கி குளச்சல் தொகுதியில் உள்ளது. இது பாஜகவுக்கு பலமாக உள்ளது.
மீனவர்களுக்கு தவெக குறி
தவெக சார்பில் போட்டியிடும் மருத்துவர் பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ், தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். ஏற்கெனவே, விஜய்க்கு இளைஞர்கள் மத்தியிலும், முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் மத்தியிலும் இருக்கும் ஆதரவுடன், பெரிய கட்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தேர்தல் பணியில் இவர் வேகம் காட்டி வருகிறார். அத்துடன், கடற்கரை கிராமங்களில் விஜய்க்கு இருக்கும் ஆதரவை, அறுவடை செய்யும் வகையில் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
போராளி ஆன்சி ஷோபா
நாம் தமிழர் கட்சி சார்பில் ஆன்சி ஷோபா போட்டியிடுகிறார். இரணியல் டாஸ்மாக் மதுபாரை மூட நடத்திய தொடர் போராட்டம், இயற்கை பாதுகாப்பு போராட்டம் போன்றவற்றில் பங்கேற்று, களப்போராளியாக குளச்சல் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் இவர்.
கிராமப்புற பெண்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு களத்தில் நிற்பவர் என்று பெயரெடுத்தவர். இவருக்கென நல்ல வாக்கு வங்கி உள்ளது. அது தனக்கு கைகொடுக்கும் என ஆன்சிஷோபா நம்புகிறார்.
நீண்டகால பிரச்சினைகள்
கடந்த 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களில் காங்கிரஸை சேர்ந்த ஜே.ஜி.பிரின்ஸை, இத்தொகுதி மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஆனால், இத்தொகுதியின் பிரச்சினைகள் 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாமலேயே உள்ளன.
அன்றாடம் குடிநீர் கிடைக்காத கிராமங்கள் ஏராளம். ஏவிஎம் கால்வாயை சீரமைத்து படகு போக்குவரத்து மேற்கொள்ள வேண்டும். மீனவ கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும்.
குளச்சல் பேருந்து நிலைய மேம்பாடு, பேருந்து வசதிகள், அடிப்படை வசதிகள், குளச்சல், முட்டம் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மேம்பாடு, மீன்பதப்படுத்தும் கூடம், விசைப்படகு தொழிற்கூடம், மீன்பிடி உபகரண தொழிற்சாலை போன்ற மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள், எதிர்பார்ப்புகளாகவே உள்ளன.
கடந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸுக்கு கைகொடுத்தது மீனவர்கள் வாக்குகளே. இந்த வாக்கு வங்கியை தவெக பிரிப்பதுதான், பெரும் திருப்புமுனையாக மாறியுள்ளது. மேலும், பாஜக வேட்பாளர் சிவகுமாரைத் தவிர மற்ற மூவருமே கிறிஸ்தவர்கள்.
எனவே, கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி மூன்றாக பிரியவாய்ப்புள்ளது. குளச்சலில் மீனவர்கள், நடுநிலையாளர்களின் வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றி வாகை சூடுவார்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 1,32,540
பெண்கள் - 1,32,474
இதரர் - 1
மொத்த வாக்காளர்கள் - 2,65,015