

எல்.கே.சுதீஷ் |கோப்புப் படம்
“ஆம்பூர் தொகுதியில் எங்கள் பொதுச்செயலாளர் போட்டியிடுவது எங்கள் கையில் இல்லை; திமுக-விடம் தான் உள்ளது” என்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நேற்று ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. முடிவில், தொழுகை முடித்து வெளியே வந்த மக்களிடம் ஆம்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வான வில்வநாதனும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷும் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எல்.கே.சுதீஷ் கூறும்போது, ‘‘திமுக கூட்டணியில் எங்களுக்கான தொகுதிகள் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை. பிறகு முடிவு செய்யப்படும். நாங்கள் திமுக கூட்டணியில் இணையும் முன்பு, 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று திமுக-வினர் சொன்னார்கள். தேமுதிக சேர்ந்த பிறகு 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக இந்தமுறை கண்டிப்பாக வாஷ்அவுட் ஆகும். தவெக குறித்து தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும். கடந்த 2006-ல் நாங்கள் கட்சி ஆரம்பித்தபோது எங்களுக்கு இல்லாத பலம் வேறு யாருக்கும் இல்லை. ஆனால், அது வாக்காக மாறுமா என்பதைப் பார்க்க வேண்டும். நான் குடியாத்தத்தில் போட்டியிட்டபோது கிட்டத்தட்ட 30 ஆயிரம் வாக்குகள் பெற்றேன். கூட்டணி என்று வரும்போதுதான் பெரிய வெற்றி கிடைக்கும்’’ என்றார்.
தொடர்ந்து, தனது சொந்த கிராமமான குடியாத்தம் அடுத்த செம்பேட்டில் குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்திய சுதீஷ் அங்கு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கான தொகுதிகள் அறிவித்த பிறகு மீண்டும் இங்கே வந்து எங்கள் குலதெய்வ கோயிலில் வழிபட்ட பிறகு பிரச்சாரம் தொடங்கப்படும்.
ஆம்பூர் தொகுதியில் எங்கள் பொதுச்செயலாளர் போட்டியிடுவது எங்கள் கையில் இல்லை; திமுக-விடம் தான் உள்ளது. கடந்த 2006-ல் நான் குடியாத்தம் தொகுதியில் பெற்றதை விட கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றேன். ஆனால், வெற்றி பெற முடியவில்லை. நடிகர்கள் கட்சி ஆரம்பித்த பிறகு வெற்றி பெறுவது கடினம் தான்’’ என்றார்.
முன்னதாக, செம்பேடு கிராமத்துக்கு வரும் வழியில் சுதீஷுக்கு தேமுதிக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவரது காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.