

திருச்சி: திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் சொந்த சின்னத்தில் மதிமுக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், அதற்கு வசதியாக திருச்சி கிழக்கு தொகுதியை ஒதுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மதிமுக வினரிடையே ஏற்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வலியுறுத்தப்பட்ட நிலையில், தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வாதாடி, போராடி தீப்பெட்டி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
அதைத்தொடர்ந்து மதிமுக மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற சட்டப்பேரவைத் தேர்தலில் 12 இடங்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் வெறும் 4 தொகுதிகள் மட்டுமே மதிமுகவுக்கு ஒதுக்கிய நிலையில், அதில் ஒரு தொகுதியில் மட்டுமே சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வெறும் 4 தொகுதி என்பதால் மதிமுக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக வழங்கிய சீட்டுகள் எண்ணிக்கை மதிமுகவின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை அளித்திருந்தாலும், அவர்கள் கொடுத்திருக்கும் தனிச்சின்னம் என்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
அதன்படி, திருச்சி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு தீப்பெட்டிச் சின்னம் நன்கு அறிமுகமாகி உள்ளது என்பதால், இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் மதிமுக வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளையும் தன்வசம் வைத்துள்ள திமுக, ஒரு தொகுதியை விட்டுத் தர முன்வருமா?. மலைக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு தொகுதியில் மதிமுகவின் தீப்பெட்டி பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.