

“தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மாநாட்டில் அறிவிப்போம்” என பிரேமலதா பிரகடனம் செய்திருப் பதால் தேமுதிக-வின் கடலூர் மாநாட்டை அனைத்துக் கட்சிகளுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பசார் கிராமத்தில், ’மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை’ ஜனவரி 9-ம் தேதி நடத்துகிறது தேமுதிக. இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 130 ஏக்கர் பரப்பில் மாநாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. ‘எம்மதமும் சம்மதம்’ என்பதைச் சொல்லும் விதமாக மும்மதங்களின் அடையாளங்கள் மாநாட்டு முகப்பில் வைக்கப் பட்டுள்ளன. விஜயகாந்த் பொதுமக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், அவரது முழு உருவ படங்கள் மாநாட்டுத் திடலை அலங்கரிக்கின்றன.
மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்ப்பதற்காக பக்கத்து மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தேமுதிக-வினருடன் பேச்சுக் கொடுத்தபோது, “யாருடன் கூட்டணி வைக்கலாம் என எங்க அண்ணியார் கருத்துக் கேட்டுருக்காங்க. நாங்க எல்லாம் திமுக கூட்டணி தான்னு உறுதியா சொல்லிட்டோம். பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களின் விருப்பமும் அதுதான். அதனால், அநேகமா திமுக-வுடன் கூட்டணின்னு தான் அண்ணியார் அறிவிப்பாங்க. கேப்டன் இருந்திருந்தால் இப்ப அவரு தான் கிங் மேக்கரா இருந்திருப்பாரு” என்றனர்.
மாநாட்டுப் பணிகளில் மும்முரமாக இருந்த கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் பண்ருட்டி சிவக்கொழுந்துவிடம் பேசினோம். “மாநாட்டு பணிகள் ஓரிரு நாளில் முடிந்து விடும், இடையில் மழை குறுக்கிட்டதால், சற்று பணியில் தொய்வு இருந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வருவதால். அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார். எந்தக் கூட்டணிக்கு செல்லலாம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “அது அண்ணியார் மட்டுமே அறியவேண்டியது. எங்கக்கிட்ட கேட்டதுக்கு நாங்க சொல்ல வேண்டியதை சீட்டு மூலமா சொல்லி இருக்கிறோம்” என்றார்.
மாநாட்டு செலவுகள் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட தேமுதிக நிர்வாகிகள், “தலைமை ஒரு தொகை கொடுத்தது. மற்றபடி நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து கொஞ்சம் தொகை போட்டு செய்கிறோம். தேமுதிக தொண்டர்கள் எப்போதும் வீறு கொண்டு எழக்கூடியவர்கள், தன்னெழுச்சியாக வருவார்கள் என நம்புகிறோம்” என்றனர். வேலூரில் இருந்து வந்திருந்த தேமுதிக நிர்வாகி ஒருவர், “கேப்டன் காலத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை என்பது உண்மைதான். கூட்டணி தொடர்பாகவும் தீர்க்கமான முடிவு இல்லை. ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் தான் முடிவு எடுக்கிறார்கள். இப்பவும் இது தாமதம் தான்.
இந்நேரம் கூட்டணியை அறிவித்திருந்தாலாவது, கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் உதவி செய்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக எந்தப் பொறுப்பும் இல்லாததால் வருமானத்துக்கு வழியில்லாமல் இருக்கிறோம். அதனால் மாநாட்டுக்கு எப்படி ஆட்களைத் திரட்டப் போகிறோம் என்று புரியாமல் நிர்வாகிகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள்” என்றார்.