

“திமுக தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்ற திசையையும் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு காட்டியுள்ளது.” என காங்கிரஸ் எம்பி-யான மாணிக்கம் தாகூர் மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக நேற்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் 2 நாள் பயணம் என்பது அதிமுக-வை மிரட்டும் பயணமாகத்தான் அமைந்து உள்ளது. அதிமுக-வை அமித் ஷா மிரட்டிப் பணிய வைத்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர்
டிடிவி. தினகரனுக்கு என்னுடைய வாழ்த்துகள். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என அவரிடமிருந்து ஒரு குரல் வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
திமுக எம்பி-யான அப்துல்லாவுக்கு ஆர்எஸ்எஸ் குறித்து முழுமையாக தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பை நெஞ்சுக்கு நேராக எதிர்த்து நிற்பது காங்கிரஸ்காரன். அவர்களுடன் எந்தக் காலத்திலும் சமரசம் கிடையாது. யாரைப்பற்றி பேசுகிறோம் என்பதை யோசித்துப் பேச வேண்டும். தயவு செய்து மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்.
லயோலா கல்லூரி மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி என்பது அதில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துதான் வெற்றிபெற வைக்க முடிகிறது.
நாடு முழுவதும் இண்டியா கூட்டணி வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் காங்கிரஸ், அதேசமயம் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என நினைக்கிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கும் மற்ற மாநிலங்களில் அதிகாரத்தில் பங்குபெற காங்கிரஸ் தயாராக இருக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி என்ற ஒரு சிந்தனை வந்திருக்கிறது.
காங்கிரஸை பொறுத்தமட்டில் கட்சி சார்பில் வாக்குறுதிகளைச் சொல்லும் அதை நிறைவேற்ற காங்கிரஸுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற காலம் வந்து விட்டது. தமிழகத்தில் இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற திசையை லயோலா கருத்துக்கணிப்பு காட்டியுள்ளது.
திமுக தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்ற திசையையும் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு காட்டியுள்ளது. கூட்டணிக் கட்சியில்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. ராகுல் காந்தியின் பலத்தைப் பார்த்துத் தான் எங்களுடன் மற்ற கட்சிகள் கூட்டணி வைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.