

அண்ணாமலை
பழநி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம். படிப்படியாக அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவோம் என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி சண்முக நதியில் பொதுமக்களின் பங்களிப்புடனும், தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடனும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். கடந்த சில வாரங்களாக நடந்துவந்த இப்பணி முடிவடைந்ததை அடுத்து, தூய்மைப்படுத்தப்பட்ட சண்முக நதியை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை பேசியதாவது: சண்முக நதியைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற பெரிய நோக்கத்தோடு கடந்த 8 வாரங்களாக தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழநிக்கு வருவோர் சண்முக நதியில் தீர்த்தம் எடுத்து மலைக்கோயிலுக்குச் செல்வது வழக்கம். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த நதி மாசடைந்து ஒரு சாக்கடையைப்போல் மாறி மக்கள் இந்தப் பக்கம் வருவதைத் தவிர்த்து நேரடியாக பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.
600 டன்னுக்கு மேல் இருந்த குப்பை அள்ளப்பட்டு, புனித நதியாக மாற்றப்பட்டுள்ளது. நதிக்கரையில் முருகப்பெருமானுக்கு உகந்த மரமான கடம்ப மரங்கள் நடப்பட்டுள்ளன. பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை அறநிலையத் துறை செய்துகொடுப்பதில்லை. சண்முக நதி இன்று சுத்தமாக இருப்பதுபோல் என்றும் இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதையெல்லாம் உள்ளாட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும். உள்ளாட்சி என்பது தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் போட்டியிடுவார்கள். கோட்டையில் கேள்வி கேட்பதைவிட உள்ளாட்சிகளில் கேள்வி கேட்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள நல்லவர்கள், வல்லவர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடச் செய்ய வேண்டும். ஊராட்சி நிர்வாகம் சரியாகச் செயல்படும் இடம் கேரளம்.
ஊரின் தலைவருக்கு முன்னுரிமை கொடுத்து வேலைசெய்ய வைத்தால்தான், அங்கு வேலை சிறப்பாக நடக்கும். அடிப்படை பிரச்சினைகளைச் சரிசெய்து கொடுப்பவர்கள் வேண்டும். நம்மிடம் இலக்கு மட்டுமல்ல, நோக்கமும் உள்ளது. தொலைநோக்குப் பார்வையும் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி படிப்படியாக அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.