மதுரை மாவட்டத்தில் காங்கிரஸுக்கு தனி தொகுதி கிடைக்குமா?

ஏங்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்
மதுரை மாவட்டத்தில் காங்கிரஸுக்கு தனி தொகுதி கிடைக்குமா?
Updated on
2 min read

மதுரை: முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து ஒரு தலித் எம்எல்ஏ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், திமுக கூட்டணியிடமிருந்து சோழவந்தான் தனித் தொகுதியை கேட்டுப் பெற்று வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைமைக்கு தொண்டர்கள், நிர்வாகி கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகமுறை காங்கிரஸும், அதிமுகவும் வென்றுள்ளன. காங்கிரஸ் 7 முறையும், தமாகா ஒரு முறையும், அதிமுக 6 முறையும் வென்றன.

இத்தொகுதியில் 1957-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கக்கன், பக்தவத் சலம், காமராஜரின் அமைச்சரவையில் பொதுப்பணி, காவல்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட முக்கியத் துறை அமைச்சராக தனித்துவத்துடன் செயல்பட்டார்.

கடைசிக் காலம் வரை அரசு பேருந்துகளையும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை மட்டுமே பயன்படுத்தி வந்தார். இப்படி நேர்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் கக்கன். சுதந்திரப் போராட்ட தியாகி, மக்களவை உறுப்பினர், தமிழக காங்கிரஸ் தலைவர், இந்திய அரசியல் அமைப்பியல் உறுப்பினர் என பல பதவிகளை வகித்தார்.

மேலூர் இரட்டை உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்தபோது அதில் ஒருவரில் தலித்தாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கக்கன். அவருக்குப் பிறகு இந்தத் தொகுதி பொதுத் தொகுதியானது. ஆனால், கக்கனுக்குப்பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு தலித் எம்எல்ஏகூட தேர்ந்தெடுக்கப் படவில்லை.

1977-ம் ஆண்டு சமயநல்லூர் தனித்தொகுதியாக இருந்தபோது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்மேகம், அதிமுக வேட்பாளர் செல்வ ராஜிடம் தோல்வி அடைந்தார்.அதற்குப்பின் காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் வாய்ப்பளிக்க வில்லை.

தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதுரை மாவட்டத்தின் ஒரே தனித் தொகுதியான சோழவந்தானை கேட்டுப்பெற வேண்டும் என்று மாநிலத் தலைமைக்கும், தேசிய தலைமைக்கும் காங்கிரஸ் கட்சியினர் மனுக்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் பாண்டியன் கூறுகையில், ‘‘கக்கனுக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு தலித் எம்எல்ஏகூட சட்டப்பேரவைக்கு அனுப்பப் படவில்லை. தலித் சமூகத்தினருக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

மதுரையைச் சேர்ந்தவர், மேலூரை சேர்ந்தவர் என்று கக்கனின் பெருமைகளைச் சொல்கிறோமே தவிர, அவரது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எம்எல்ஏ ஆக்க நிர்வாகிகளுக்கு மனமில்லை. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் 1962-ம் ஆண்டு சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து மட்டும் பொன்னம்மாள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர்களுக்கு பிறகு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு தலித் எம்எல்ஏ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இடைப்பட்ட காலத்தில் பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி, நிலக்கோட்டை, சோழவந்தானில் வாய்ப்புக் கேட்டார். அவருக்கு சோழ வந்தானில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

காமராஜரின் ஆட்சி அமைப்போம் என்று கூறும் காங்கிரஸ் கட்சி, கக்கன் வாழ்ந்த மண்ணில் இருந்து ஒரு தலித் சட்டப்பேரவை உறுப்பினரை அனுப்ப இந்தத் தேர்தலிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சோழவந்தான் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டுப் பெற வேண்டும். ஆனால், மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வடக்கு, தெற்கு தொகுதிகளைக் கேட்டு வருகின்றனர். அவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்துக்காகவும் அல்லது அவரது உறவுகளை வேட்பாளர்களாக்கவும் மட்டுமே திட்டமிடுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி தலித் மற்றும் சிறுபான்மையினர்தான். எனவே, சோழவந்தான் தொகுதியை திமுக தலைமையிடம் காங்கிரஸ் கேட்டுப் பெற்று சட்டப்பேரவைக்கு ஒரு தலித்தை அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸுக்கு தனி தொகுதி கிடைக்குமா?
தனித்து விடப்பட்ட தவெக: அதீத நம்பிக்கையில் இருக்கிறாரா விஜய்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in