திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா இருக்காதா? - விஜய்யை வைத்து விடியல் தேடும் காங்கிரஸார்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா இருக்காதா? - விஜய்யை வைத்து விடியல் தேடும் காங்கிரஸார்
Updated on
2 min read

“காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் வாக்கு வாங்கி முன்பு போல் இல்லை” என்று பலரும் பலவிதமாகப் பேசினாலும் ‘கை’யின் தேவை ‘சூரியனுக்குத்’ தேவை என நினைக்கிறது திமுக தலைமை. அதனால் தான் திமுக-வுடன் காங்கிரஸ் இருக்குமா இருக்காதா என்ற பிரதான விவாதம் தமிழக அரசியலில் இப்போது பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்று சந்தேகம் கிளம்பக் காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. வந்தவர் சும்மா வராமல், “ஆட்சியில் பங்கு தருவோம்” என்று எடுத்த எடுப்பிலேயே தூண்டில் வீசியதும் தமிழக காங்கிரஸில் பலருக்கும் சபலம் தட்டிவிட்டது.

போதாக்குறைக்கு, சென்ற இடமெல்லாம் விஜய்க்கு கூடிய ‘சிறப்பை’ பார்த்துவிட்டு, ஊசலாட்டத்தில் இருந்த ஒரு சிலரும், ‘அந்தப் பக்கம் போய்த்தான் பார்க்கலாமே’ என்று டீக்கடைப் பிரச்சாரம் பண்ண ஆரம்பித்தார்கள். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது ராகுல் காந்தியே விஜய்யை போனில் அழைத்துப் பேசினார் என்றதும் காங்கிரஸின் இளம் எம்.பி-க்கள் சிலருக்கும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.

கடந்த 1996-ல் அதிமுக மீது மக்களுக்கு இருந்த அதிருப்திகளை கவனத்தில் கொண்டு அந்தக் கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்ற வாதத்தை அனுபவசாலியான மூப்பனார் முன்வைத்தார். ஆனால், அதைப் புறந்தள்ளிவிட்டு அதிமுக-வுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ் தலைமை. அதை ஏற்காமல், தன்மான காங்கிரஸாரைச் சேர்த்துக் கொண்டு தமிழகத்தில் தமாகா-வை முளைக்க வைத்தார் மூப்பனார்.

அந்தத் தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட தமாகா, 40 எம்எல்ஏ-க்களையும் 20 எம்பி-க்களையும் அலுப்பில்லாமல் அள்ளியது. இதற்கு முழுமுதற் காரணம், அப்போது அரசியலுக்கு வராமலே வந்து நின்ற ரஜினிகாந்த். விஜய்யுடன் போகலாமே என்று உசுப்பேற்றும் காங்கிரஸாரின் கண் முன்னே இந்த ஸீனெல்லாம் புகை மூட்டம் போல் இப்போது வந்து போகிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், “1980 நாடாளுமன்றத் தேர்தலில், ‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக’ என்று சொல்லி இந்திரா காந்தியை வரவேற்ற கருணாநிதி, காங்கிரஸுக்கு சரி பாதி சீட்டுகளை விட்டுக் கொடுத்தார்.

அந்தத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் உறவை முறித்துக் கொண்ட திமுக, மீண்டும் 24 ஆண்டுகள் கழித்து 2004-ல் தான் காங்கிரஸுடன் கைகோத்தது. ஆனால், மீண்டும் கூட்டாளியாக எங்களைச் சேர்த்துக் கொண்டாலும் எங்களுக்கான தொகுதிகளை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்தது திமுக. 2011-ல் அதிகபட்சமாக 63 சட்டப்பேரவைத் தொகுதிகளை காங்கிரஸுக்கு தந்தவர்கள், கடந்த முறை அதை 25-ல் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

1980-ல் 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இப்போது 9 தொகுதிகளில் வந்து நிற்கிறது. அதேபோல், உள்ளாட்சியிலும் காங்கிரஸுக்கான பங்கை திமுக தலைமையே தர நினைத்தாலும் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் விடுவதில்லை. இந்த அழுத்தங்களை எல்லாம் தாங்க முடியாமல் தான் காங்கிரஸ் தொண்டர்கள் இப்போது விஜய்யை கைகாட்டுகிறார்கள்” என்றனர்.

விஜய் வீட்டுக்கு வழிகாட்டும் காங்கிரஸ் விஐபி-களுக்கு சில தனிப்பட்ட அஜென்டாக்களும் இருக்கின்றன. கரூர் எம்.பி.யான ஜோதிமணிக்கு செந்தில்பாலாஜியுடன் ஒத்துப்போகவில்லை. அதனால் அவர், “விஜய் ஒன்றும் காங்கிரஸுக்கு புதியவரல்ல” என்று புதுத் தகவல் சொல்கிறார். விருதுநகர் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் திமுக உள்ளடிகளால் கடந்த முறை பார்டரில் தான் பாஸானார்.

அதனால் அவர், “விஜய் தான் எதிர்க்கட்சி தலைவராகப் போகிறார்” என்ற ரேஞ்சுக்குப் பேசுகிறார். இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு என்ன ஆனாலும் இவர்களுக்கு எல்லாம் தனிப்பட்ட எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால், கார்த்தி சிதம்பரத்துக்கு அப்படி இல்லை. அவரது அப்பாவுக்கு விசுவாசமாக இருக்கும் சிவகங்கை திமுக-வினர் கார்த்தியையும் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கிறார்கள். அவர்களின் தயவு தனக்கு காலத்துக்கும் தேவை என்பதால் விஜய்யை தூக்கிப் பிடிக்காமல் அடக்கி வாசிக்கிறார் கார்த்தி.

மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு திமுக உறவு வேண்டும். ஆனால், சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ்குமாருக்கு விஜய் பக்கம் போனால் அவரது தொகுதியை வென்றெடுப்பது எளிது. செல்வப்பெருந்தகை திமுக-வை ஆதரிக்கிறார் என்றால் அதன் பின்னணியில் கார்கேயின் கண்ணசைவும் கட்டாயம் இருக்கும்.

ஆனால், காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரான கே.சி.வேணுகோபாலுக்கு கேரள முதல்வர் பதவி மீது ஒரு கண். அதற்கு விஜய் தங்களோடு இருந்தால் கேரளத்தில் காங்கிரஸுக்கான வெற்றி இலகுவாகும் என நினைக்கிறார் அவர். முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கும் வேணுவே விஜய்யை விரும்புவதால், டெல்லியில் இருக்கும் மற்ற கதர்பார்ட்டிகளும், “யார் அந்த விஜய்?” என இப்போது விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆக, தொண்டர்கள் ஒரு மன நிலையிலும் தலைமை அதற்கு நேர் மன நிலையிலும் இருந்த 1996 காலகட்டம் போல் தமிழக காங்கிரஸ் நிலவரம் இருக்க, சத்தமில்லாமல் காங்கிரஸ் தலைமை இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறது.

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக சூரஜ் ஹெக்டே, கிரீஷ் சோடங்கர் ஆகியோர் மட்டுமே இதுவரை இருந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வாவையும் தமிழகத்துக்கான கூடுதல் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது காங்கிரஸ்.

இரண்டு பேருக்கே இங்கு பெரிதாக வேலை இல்லாதபோது, விஜய்க்கு நன்கு பரிச்சயமான சினிமா தொழிலில் இருக்கும் நிவேதித் ஆல்வாவை ஏன் கூடுதல் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்? ஒருவேளை, திமுக முரண்டு பிடித்தால் பனையூர் பக்கம் பாதையை மாற்ற வசதியாக இருக்கும் என்பதற்காகவா?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா இருக்காதா? - விஜய்யை வைத்து விடியல் தேடும் காங்கிரஸார்
‘எஸ்ஐஆர் வேலை எப்படிப் போயிட்டு இருக்கு..?’ - எதிர்த்தாலும் திமுகவினரை தூங்கவிடாத ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in