

மதுரை: மதுரை முக்கம்பட்டியில் கட்டப்பட்டுள்ள உணவுப் பூங்கா எப்போது செயல் பாட்டுக்கு வரும் என சுற்றுவட்டார பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தால், பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், உணவு வீணாவதைத் தடுத்தல், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே முக்கம்பட்டியில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியம் ரூ.5.79 கோடி, விற்பனைக்குழுவின் பங்களிப்புத் தொகை ரூ.6.41 கோடி, நபார்டு பங்களிப்புத் தொகை ரூ.12.92 கோடி, வங்கிக்கடன் ரூ.6.94 கோடி என மொத்தம் ரூ.32.06 கோடி மதிப்பீட்டில் 10 ஏக்கரில் வேளாண் பொருள் பதப்படுத்தும் தொகுப்பு என்ற உணவுப் பூங்கா அமைக்கும் பணி, கடந்த 2018-19 நிதியாண்டில் தொடங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது: இந்த வேளாண் பொருள் பதப்படுத்தும் தொகுப்பில் 5 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட உலர்பொருள் சேமிப்பு கிடங்கு, 3 சேமிப்புக் கிடங்குகள், காய்கறி சிப்பமிடும் அறை, அலுவலகக் கட்டிடம், லாரி எடை ஆகியவை 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 5 ஏக்கரை வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனை நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளன.
வேளாண் விளைபொருட்களைப் பதப்படுத்தவும், சந்தைப்படுத்தவும், உணவு பதப்படுத்தும் தொழில்களைத் தொடங்கும் தொழில்முனைவோருக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்துக்கான பணிகள் நிறைவடைந் துள்ளன. இந்த கட்டிடத்தின் மின் இணைப்பு உள்ளிட்ட ஒரு சில பணிகள் மட்டுமே முடிக்கப்பட உள்ளன. விரைவில் இது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும், எனக் கூறினார்.
இது குறித்து மதுரை விற்பனைக் குழு செயலாளர் அழகுராஜா கூறுகையில், வேளாண் பொருள் பதப்படுத்தும் தொகுப்பில் உள்ள கிடங்கில், தற்போது 6 ஆயிரம் டன் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு வரும் அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வர வாய்ப் புள்ளது.
இதன்மூலம், இந்த முக்கம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றார்.