

மதுரை: திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் உசிலம்பட்டிக்கு வேட் பாளராக டி.சரவணக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலூர் தொகுதி வேட்பாளர் உள்ளூர்க்காரரா, வெளியூர்க்காரரா என்ற போட்டி நிலவுவதால், வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளின் வேட் பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மேலூர் தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்பே, கடந்த வாரம் மேலூர் தொகுதியில் உள்ளூர்காரர் களுக்கு வாய்ப்பு அளிக்காமல் வெளியூர்க்காரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது மேலூர் தொகுதிக்கு உள்ளூரைச் சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை மாநிலத் தலைவர் மகாத்மா சீனிவாசன் என்பவரும், சிவகங்கை அருகே பச்சேரியைச் சேர்ந்த சி.ஆர்.சுந்தர்ராஜன் உட்பட சிலர் வேட்பாளராக கடும் போட்டியில் உள்ளதால், பெயர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் சி.ஆர்.சுந்தர்ராஜன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை எம்பி கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோர் மூலம் சிவகங்கை தொகுதி வேட்பாளராக முயற்சி செய்தார்.
அத்தொகுதியை திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸுக்கு ஒதுக்கியதால் இவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் மேலூர் அருகே ஆட்டுக்குளத்தில் கள்ளழகர் பாலிடெக்னிக் கல்லூரி நடத்துவதால் மேலூர் தொகுதியை குறிவைத்தார்.
இதில் கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம் ஆகியோர் மூலம் டெல்லி தலைமையிடம் காய் நகர்த்தி வருகிறார். மேலூர் தொகுதியை சேர்ந்த மகாத்மா சீனிவாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத்துறை தலைவராக உள்ளார். இவர் தனக்கு வாய்ப்பு அளிக்கக்கோரி போராடி வருகிறார்.
இருவரில் யார் வேட்பாளர் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் வேட்பாளர் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டி.சரவணகுமார்
உசிலம்பட்டி பசும்பொன் நகரில் வசிக்கும் டி.சரவணகுமார் (48), சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். எம்பிஏ எல்எல்பி படித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.
டி.சரவணகுமார்
இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர், தேனி எம்பி தேர்தல் பொறுப்பாளர், சட்டப்பேரவை தேர்தல் குழு உறுப்பினர், உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் என கட்சி பணிகளில் ஈடுபட்டவர். மனைவி எஸ்.பிரவீனா. மேகா செளபர்ணிகா, ஜனனி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.