

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் திராவிட சித்தாந்தங்களுக்கு மாற்றாக, ஒரு தேசியக் கட்சியால் விஸ்வரூபம் எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு 'அண்ணாமலை' என்ற ஒற்றைப் பெயர் விடையாய் உருவெடுத்தது.
1980-களில் விதைக்கப்பட்ட பாஜக, தமிழக மண்ணில் வேர் பிடிக்க நான்கு தசாப்தங்களாகப் போராடியது. 1996-ல் பத்மநாபபுரம் தொகுதி மூலம் தனது கணக்கைத் தொடங்கியிருந்தாலும், திராவிடக் கட்சிகளின் ‘தோள் மீது ஏறி’ பயணிப்பதே அக்கட்சியின் நீண்டகால வியூகமாக இருந்து வந்தது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றதும், தமிழக பாஜக-வின் அரசியல் முகம் முற்றிலுமாக மாறியது. பழைய பாணி ‘அறிக்கை அரசியலை’ ஓரம் கட்டிவிட்டு, ஆளுங்கட்சியைத் தரவுகளுடன் மிரட்டும் ‘நேரடி மோதல்’ போக்கை அவர் கையாண்டார்.
‘என் மண் என் மக்கள்’ என்ற நெடும்பயணம் மூலம் தாமரைக் கொடியை குக்கிராமங்கள் வரை கொண்டு சென்றார். இதன் அறுவடையாக, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தைப் பெற்றது. பல தொகுதிகளில் அதிமுக-வையே மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது அண்ணாமலையின் ஆளுமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-வுடன் மீண்டும் கரம் கோக்க டெல்லி மேலிடம் ஆர்வம் காட்டியது. ஆனால், "அதிமுக-வுடன் இனி ஒருபோதும் உறவில்லை" என்ற அண்ணாமலையின் பிடிவாதமான ‘தனி வழி’ கோட்பாடு, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பெரும் முட்டுக்கட்டையானது. "வாக்கு சதவீதத்தை விட, தொகுதிகளைக் கைப்பற்றி சட்டப்பேரவைக்குள் நுழைவதே தேசிய அளவில் கட்சிக்குப் பலம்" என்ற அமித் ஷாவின் ‘யதார்த்த அரசியல்’ கணக்கு இங்கே தான் அண்ணாமலையுடன் முரண்பட்டது.
2024-ல் வாக்குகள் அதிகரித்தாலும் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாதது அண்ணாமலைக்குக் கடுமையான பின்னடைவாக அமைந்தது. இதன் விளைவாக, தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட டெல்லி தலைமை, தேர்தல் களத்தில் அனுபவம் கொண்ட நயினார் நாகேந்திரனைத் தலைவராக்கியது. ஆனால், பாஜக கூட்டங்களில் இப்போதும் அண்ணாமலைக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேரிடியாக இறங்கியுள்ளது. அவர் ‘கட்டம்கட்டப்பட்டுவிட்டார்’ என்ற முணுமுணுப்புகள் பாஜக வட்டாரத்தில் பலமாக எதிரொலிக்கின்றன. கோவை வடக்கு அல்லது சிங்காநல்லூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அவரது விசுவாசிகள் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
அண்ணாமலை மட்டுமல்லாது, அவரது தீவிர ஆதரவாளர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது கூடுதல் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, அமர்பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன், ஏ.பி.முருகானந்தம், வினோஜ் பி.செல்வம் மற்றும் எஸ்.ஜி.சூர்யா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் பெயர் பட்டியலில் இல்லை.
திருப்பூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த ஏ.பி.முருகானந்தத்துக்குப் பதில் புதுமுகம் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, கட்சிக்குள் ‘அண்ணாமலை அணி’ திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதன் பின்னணியில் பழனிசாமி, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் ‘கூட்டு வியூகம்’ இருப்பதாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் புழுங்குகிறார்கள். எனினும், மற்றொரு தரப்போ, சித்தாந்தத்துக்காகத் தசாப்தங்களாக உழைக்கும் சாதாரணத் தொண்டர்களுக்கு இந்தப் பட்டியலில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சமாதானம் கொள்கிறது.