

கோவை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதன்மை செயலாளர் நா.முருகானந்தம் ஆகியோருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிராமங்கள் தோறும் நியமிக்கப்படும் வேளாண் உதவி அலுவலர்களிடம் வேளாண்மை சம்பந்தப்பட்ட 4 துறைகளின் அரசு திட்டங்களை, உரிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் பெற்றிட வாய்ப்பாக தமிழ்நாடு அரசு உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் அமல்படுத்தப்படுகிறது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்தினால் எதிர்வரும் காலங்களில் விவசாயிகளுக்கு நடைமுறை சிக்கல் தான் ஏற்படும். வேளாண் துறையின் அனைத்து உற்பத்திகளும் பாதிக்கப்படும். வேளாண் அலுவலர் சராசரியாக 6 வருவாய் கிராமங்களை தற்போது பொறுப்பெடுத்து செயல்படுவதால், விவசாயிகள் அனைவரையும் நேரில் சந்திக்கவும், திட்டங்களை விளக்கவும் முடிவதில்லை.
இந்த புதிய திட்டம் மூலம் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை என 4 துறை அலுவலர்களையும் இணைத்து, வருவாய் கிராமங்களை பிரித்து அவர்களை ஒதுக்கீடு செய்து, பொறுப்பளிக்கும்போது, சராசரியாக ஒருவருக்கு 3 கிராமங்கள் மட்டும் பொறுப்பளிக்கப்படுவதால், விவசாயிகளை அன்றாடம் அணுகி ஆலோசனை வழங்க முடியும். ஆனால் இதில் உள்ள 4 துறை அலுவலர்களுக்கு பிற 3 துறைகள் சார்ந்த பயிர்களின் தொழில்நுட்பம், திட்ட நடைமுறைகள் தெரியாது.
இவர்கள் வேளாண்மையில் தனித்தனி சிறப்பு படிப்பை முடித்தவர்கள். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 17 ஆண்டு காலம் அவரவர் துறைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அதில் அனுபவம் பெற்றவர்கள். கிராமங்களில் உள்ள அனைத்து பயிர்களுக்கும், இவர்கள் தொழில்நுட்ப ஆலோசனை வழங்க முடியாது.
கிராமங்கள் தோறும் சென்று, விவசாயிகளிடம் தொழில்நுட்பங்கள் மற்றும் மானியத் திட்டங்கள் செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் தனியார் விற்பனை கடைகளில் தான் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுவதுடன், அவர்கள் கொடுக்கும் இடுபொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
அரசு விவசாயிகளுக்கு உண்மையாகவே உதவ விரும்பினால், வேளாண் உதவி அலுவலர்களை புதியதாக கூடுதலாக நியமிக்க வேண்டும். ஆனால் அரசின் புதிய முறையால், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.
வேளாண்துறைக்கு அரசின் நல்ல நோக்கத்துக்கு ஏற்ப, தேவையான உதவி வேளாண் கள அலுவலர்களை புதியதாக தேர்வு செய்து நியமிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம், ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை தடுத்திடும் வகையில் இருப்பதால், மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.