

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | கோப்புப் படம்
தஞ்சாவூர்: அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் சரியான தலைமைப் பண்பு இல்லாததால் நஷ்டத்தில் இயங்குகின்றன என முன்னாள் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தொழில், வர்த்தக சங்கம் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்று, “வணிகத்தில் நெருக்கடியான சூழலில் தலைமைப்பண்பு” என்கிற தலைப்பில் முன்னாள் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது: சிஏஜி தணிக்கை அறிக்கையில் தமிழக அரசின் நிறுவனங்களுக்கான மூலதனச் செலவு 8 சதவீதம் என்றும், சராசரி மூலதனத்தின் மீதான வருவாய் 0.8 சதவீதம் மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்க காரணம் இயலாமை, தவறான நோக்கங்கள், செயல்கள், போதிய தலைமைப் பண்பு இல்லாததால் வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது. அமைச்சராக இருந்தபோது 2 ஆண்டுகளில் 7,000-க்கும் அதிகமான கோப்புகளை பார்த்தது எனது சாதனை. நிதி, மனிதவள மேலாண்மை, வளர்ச்சித் திட்டமிடுதல் போன்ற துறைகள் என்னிடம் இருந்தன.
நான் 2 ஆண்டுகளில் ஏறத்தாழ 7 ஆயிரம் கோப்புகளில் 1,300 கோப்புகளை திருப்பி அனுப்பினேன். இதனால்தான் வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைந்தது. வரலாற்றில் செய்ய முடியாத மாற்றத்தை நாங்கள் செய்தோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எம்.எஸ்.ஆசிப் அலி தலைமை வகித்தார். செயலாளர் சிடி.ராமநாதன், பொருளாளர் எஸ்.முத்தையா, துணைத் தலைவர் பிரபு, இணைச் செயலர் சுந்தரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.