“தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நாடிச் செல்வது ஏன்?” - தினகரன் கேள்வி

டிடிவி தினகரன் | கோப்புப் படம்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: “தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அண்டை மாநிலங்களை தொழில் நிறுவனங்கள் நாடுகின்றன. தமிழகத்தில் முதலீடு செய்வதில் இருக்கும் தடைகள் என்னென்ன?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் தென்கொரியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், தவெக அரசின் அலட்சியத்தால் தற்போது தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் முதலீடு செய்வதற்காக ஒப்பந்தம் செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த ஜூன் மாதம் தமிழகத் தொழில்துறை அமைச்சர் தென்கொரியாவுக்குச் சென்று, இந்த தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதமே தென்கொரியாவுக்குச் சென்ற ஆந்திர மாநில அமைச்சர் நர லோகேஷ், அதே தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்த நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நாடிச் செல்வது ஏன்? தமிழகத்தில் முதலீடு செய்வதில் இருக்கும் தடைகள் என்னென்ன? அவற்றைக் களைய வேண்டிய தொழில்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேட வேண்டிய தொழில்துறை, வெறும் ரீல்ஸ் போட்டே ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து விடலாம் என்ற பகல் கனவில் திளைத்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே தொழில் தொடங்க ஒப்புக்கொண்ட நிறுவனங்களின் முதலீடுகளையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் அரசு நிர்வாகத்தின் கடமை என்ற அடிப்படைகூடத் தெரியாத தவெக அரசின் அலட்சியத்தால், தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்வதால், வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, கேமராக்களுக்கு முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதால் மட்டும் தமிழகம் எந்த வகையில் வளர்ச்சியடைந்து விடாது என்பதை இனியாவது உணர்ந்து, தமிழகத்தின் தொழில் முதலீடுகளை ஈர்த்து, அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>டிடிவி தினகரன் | கோப்புப் படம்</p></div>
நகராட்சித் துறை பணிநியமன முறைகேடு: கே.என்.நேரு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

X