

சங்கராபுரம் புதுப்பாலப்பட்டு கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர் ராகேஷ்
கள்ளக்குறிச்சி: தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் வேட்பாளர்கள் காலை முதலே பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் கிராமப்புறங்களில் மக்கள் ஆரத்தி தட்டோடு வலம் வருகின்றனர்.
அந்த வகையில் அதிகமான கிராமப்புறங்களை உள்ளடக்கிய சங்கராபுரம் தொகுதியில் கள நிலவரத்தை அறிய சென்றபோது, திமுக சார்பில் களம் காணும் உதயசூரியன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரை வரவேற்க ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி தட்டோடும், மலர்களோடும் காத்திருந்தனர்.
அப்போது சில பெண்களிடம் பேசியபோது, அவர் இந்த தொகுதியில் 8-வது முறையாக போட்டியிடுகிறார். 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவருக்கு போன் செய்து பேசலாம். அங்கையற்கண்ணி அண் ணியும் எந்த விசேஷமானாலும் வந்துவிடுவார் என்று குறிப்பிட்டார்.
சங்கராபுரம் சோழம்பட்டு கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் உதயசூரியன்.
அப்படியே சங்கராபுரம் மேற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளர் ராகேஷ், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
உடன் சென்ற கூட்டணி கட்சியினரிடம் பேசியதில், “வெயில் ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. சமாளிக்க முடியவில்லை. எப்படித்தான் இந்த பசங்க அலைகிறார்களோ!'' என்றார். உங்கள் கூட்டத்தில் பசங்களையே காணலையே என்றபோது, விசில் கூட்டத்தை சொல்கிறோம் என்றார் ஆவேசமாக. தொடர்ந்து பேசும்போது, “கூட்டத்தைக்கூட்டி வேட்பாளர் வரும் வரை நிற்க வைக்க படாதபாடு படுகிறோம்.
சங்கராபுரம் தேவபாண்டலத்தில் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளர் ஜெகதீசன்.
இதில் தட்டு, சாப்பாடு, தண்ணீர் பாட்டில், புடவைன்னு செலவு எகிறிக்கொண்டே இருக்கிறது. பாக்கெட்டை நிரப்பிக் கொண்டு வந்தால்தான் அன்றைய கூட்டத்தை சமாளிக்க முடியும் போல..'' என்றனர் கவலையோடு. “தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியல், பூத் நிர்வாகி, பூத் முகவர் என பல பணிகளை ஆள் வைச்சு செய்தோம்.
வாக்காளர் பட்டியலில் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்று இரவு பகலாக வேலை செய்தோம். அவர்களை பாருங்கள், எந்த வேலையும் செய்யவில்லை. எந்த செலவும் இல்லை. ஆனால் கூட்டம் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிற்கிறது. எங்க ரெண்டு கட்சிக்கும் டஃப் கொடுக்கின்ற அளவுக்கு கூட்டமும் இருக்கிறது'' என ஆதங்கப்பட்டனர்.
சில வாக்காளர்களிடம் பேசிய போது, தவெக சார்பில் ஜெகதீசன் போட்டியிடுகிறார். அவருக்கு இளைஞர் பட்டாளம் சுற்றிச் சுற்றி வாக்கு கேட்கிறார்கள். அவரும் கணிசமாக வாக்கு வாங்குவார்.
ஆனால் திமுக, அதிமுக வுக்கும் இடையே தான் போட்டி என்றாலும், தவெக தரும் நெருக்கடி இரு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களையும் தடுமாற்றத்திற்கு ஆளாக் கியிருக்கிறது என்றவர்கள், நாம் தமிழர் களத்தில் வலம் வந்தாலும், வாக்காளர்களிடம் அவர்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றனர்.