சேலம் தெற்கு தொகுதியில் வெற்றிக் கனி யாருக்கு?

சேலம் தெற்கு தொகுதியில் வெற்றிக் கனி யாருக்கு?
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 90-வது இடம் பெற்றுள்ளது சேலம் தெற்கு தொகுதி. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு சேலம் தெற்கு தொகுதி உருவாக்கப்பட்டது.

இதற்கு முன்பு சேலம்-1 மற்றும் சேலம்-2 தொகுதிகளாக இருந்த நிலையில் அவற்றில் இருந்து சில பகுதிகளை பிரித்து, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 முதல் 60 வரையிலான வார்டுகளை உள்ளடக்கி சேலம் தெற்கு தொகுதி உருவாக்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை பெருமாள் கோயில், சுகவனேஸ்வரர் கோயில், ஈரடுக்கு பேருந்து நிலையம், குமரகிரி ஏரி உள்ளிட்டவை தெற்கு தொகுதியில் அமைந்துள்ள முக்கிய இடங்களாகும்.

சேலம் அம்மாப்பேட்டை, முதல், இரண்டாவது அக்ரஹாரம், டவுன், தாதகாப்பட்டி, குகை, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு, மணியனூர் என ஜனநெருக்கமிகுந்த பகுதிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

தொகுதியை பொருத்தவரை கன்னட தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அடுத்த இடங்களில் பட்டியலினத்தவர், முதலியார், பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஜவுளி, சாய தொழிற்சாலை, வெள்ளி, தங்க நகை ஆபரண தொழில், விசைத்தறி, கைத்தறி நெசவு, வணிக நிறுவனங்கள் ஆகியன பிரதான தொழிலாக உள்ளது.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவுறாத நிலையால் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடை இணைப்பை துண்டித்து விட்டு சாக்கடை கால்வாயை பயன்படுத்தும் நிலையும் உள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தொகுதியின் முக்கிய சாலைகள், தெருக்களில் உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன.

மேலும், நகர பகுதியில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு மற்றும் சாலை விரிவாக்கம் செய்யாததால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். சாயப்பட்டறை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு, மழைக் காலங்களில் சாக்கடை கழிவு நீர் விடுகளுக்குள் புகுவது, மழை நீருடன் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவது போன்ற சீர்கேடுகள் நிலவுகின்றன.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பல இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் அடிப்படை பிரச்சினைக்களுக்கு தீர்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் மூன்று நம்பர் லாட்டரி பல இடங்களில் மறைமுகமாக விற்பனை நடப்பதால் தொழிலாளர்களின் வருவாய் சுரண்டப்படுகிறது.

இதனால், ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேற்கண்ட பிரச்சினைகளை தீர்க்க மக்கள் போராடி வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் நடந்த 3 தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் செல்வராஜ் 1,12,691 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் 60,215 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அதேபோல, 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சக்திவேல் 1,01696 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் குணசேகரன் 71,243 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். கடந்த 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் 97,506 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய திமுக வேட்பாளர் சரவணன் 74,897 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

வேட்பாளர்களிடையே போட்டா போட்டி

அதிமுக தொடர்ந்து 3 முறை வெற்றிபெற்றுள்ள நிலையில் தற்போது அக்கட்சி சார்பில் வினோத் போட்டியிடுகிறார். திமுக சார்பில் லோகநாதன், தவெக சார்பில் பார்த்திபன், நாதக சார்பில் சோபியா ஆகியோர் முன்னணி கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.

தொடர்ந்து 3 முறை தோல்வியைத் தழுவிய திமுக இந்த முறை வெற்றிபெறும் முனைப்பில் கடுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. எப்போதும் அதிமுகவுக்கு ஆதரவு கரம் நீட்டும் தொகுதியாக இருப்பது அக்கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. வெற்றியை தக்க வைக்க அதிமுக தீவிர களப்பணியாற்றி வருகிறது.

சீமானின் நாதக வேட்பாளர் சோபியா தொகுதியில் தொண்டர்களுடன் வலம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாதக தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டின் படியேறி இம்முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தனிப்பட்டட முறையில் மக்களை அணுகி வாக்குசேகரித்து வருகின்றனர்.

அதேநேரம், புதிதாக களம் காணும் தவெக கட்சி சார்பில் போட்டியிடும் பார்த்திபன் சுறுசுறுப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சேலம் தெற்கு தொகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும்பட்சத்தில், தெற்கு தொகுதி தங்கள் வசப்படும் என்ற நம்பிக்கையில் தவெக தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சுழன்றடித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் இந்த முறை வெற்றிக்கனியை யார் பறிப்பார்கள் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,09,918

பெண் - 1,14,130

மூன்​றாம் பாலினத்​தவர் - 49

மொத்த வாக்​காளர்கள் - 2,24,097

சேலம் தெற்கு தொகுதியில் வெற்றிக் கனி யாருக்கு?
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in