பரபரப்பான பத்மநாபபுரம் தொகுதியில் ‘பக்கா’ வெற்றி யாருக்கு?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்லசுவாமி வாக்கு சேகரித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்லசுவாமி வாக்கு சேகரித்தார்.

Updated on
3 min read

நாகர்கோவில்: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது பத்மநாபபுரம். தற்போது தாலுகா தலைநகரமாகவும், நகராட்சியாகவும் விளங்கும் பத்மநாபபுரம் தொகுதியில் 2,35,511 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் கடந்த இரு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற பெருமை அமைச்சர் மனோதங்கராஜுக்கு உண்டு. இம்முறை மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி களம் இறங்கியுள்ளார். தக்கலை, பத்மநாபபுரம், குலசேகரம், பேச்சிப்பாறை மற்றும் மலைகிராமங்கள் வரை பலதரப்பட்ட மக்களின் வாக்குகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக வாக்குகள் இங்கு நிறைந்திருப்பதாலும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் வாக்குகளும் அதிகம் இருப்பதாலும் அவை தனக்கு சாதகமாக அமையும் என்று, செல்லசுவாமி நம்பியிருக்கிறார்.

திமுகவின் சாதனைகளை சொல்லியும், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பல பிரச்சினைகளுக்கு கம்யூனிஸ்ட்கள் களம் இறங்கி தீர்வு கண்டதை முன்னிறுத்தியும், இவர் வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்து நாடார் சமூகத்தை சேர்ந்த இவருக்கு கட்சியைத் தாண்டி சமூக வாக்குகளும் பரவலாக கிடைக்க வாய்ப்புள்ளது.

வாக்கு வேட்டையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் குமரி ரமேஷ்.

வாக்கு வேட்டையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் குமரி ரமேஷ்.

பாஜக வேட்பாளர்

இத்தொகுதி தமிழகத்தில் முதல் பாஜக எம்எல்ஏவை தந்தது என்ற பெருமை பெற்றது. இங்கு, 1996-ல் பாஜக சார்பில் போட்டியிட்ட வேலாயுதன் வெற்றி பெற்றிருந்தார். தற்போது, பாஜக வேட்பாளராக குமரி ரமேஷ் போட்டியிடுகிறார். கடந்த 3 முறை குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், தற்போது தொகுதி மாறி பத்மநாபபுரத்தில் போட்டியிடுகிறார்.

கிருஷ்ணவகை சமுதாயத்தை சேர்ந்த குமரி ரமேஷுக்கு இத்தொகுதியில் பரவலாக உள்ள அச்சமுதாய வாக்குகளும், இந்து நாடார், நாயர், ஈழவர், செக்காளர் மற்றும் பட்டியலினத்தவர் என பலதரப்பட்ட இந்து வாக்குகளும் கைகொடுக்கும் என இவர் நம்பியுள்ளார்.

தவெக வேட்பாளர்

தவெக வேட்பாளராக கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். பத்மநாபபுரம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட முதல்தலைமுறை வாக்காளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தமக்கு ஆதரவு தருவார்கள்.

பத்மநாபபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் கிருஷ்ணகுமார்.

பத்மநாபபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் கிருஷ்ணகுமார்.

அதிகம் களப்பணி செய்யாவிட்டாலும், அந்த வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிருஷ்ணகுமார் பணியாற்றி வருகிறார். இத்தொகுதியில் அனைத்து தரப்பு வாக்குகளையும் தவெக பிரிக்கும் நிலை உள்ளது.

நாம் தமிழர் வேட்பாளர்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீலன், பத்மநாபபுரம் தொகுதியில் கல்குவாரி பிரச்சினைகள், கனிமவள லாரிகளால் நிகழ்ந்த விபத்துகள், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை சிறைபிடித்து திரும்பி அனுப்புவது போன்ற சம்பவங்களில் நேரடியாக களத்துக்கு வந்து போராடியவர்.

இதனால் இயற்கை ஆர்வலர்கள், மலைகிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியிலான வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்கிறார். இயற்கை எழில் கொஞ்சும் பத்மநாபபுரம் தொகுதியை சீரழிப்பதை தடுத்து, சிறந்த இயற்கை சுற்றுலா தலமாக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் பணியாற்றி வருகிறார்.

இளைஞர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீலன்.

இளைஞர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீலன்.

தொகுதி மக்களின் கோரிக்கைகள்

ரப்பர் தோட்டங்கள் நிறைந்துள்ள பத்மநாபபுரம் தொகுதியில், ஒவ்வொரு தேர்தலிலும் ரப்பர் தொழிற்சாலை, ரப்பர் பூங்கா அமைத்து கொடுப்பதாக கட்சிகள் வாக்குறுதி அளிப்பதும், கடந்த இரண்டு முறை இத்தொகுதியில் வெற்றிபெற்ற திமுக அதை கண்டுகொள்ளாமல் விட்டதும் பெரும் குறையாக உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இங்கு மேலும் பல சுற்றுலா மையங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இயற்கை ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதார விலைய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். அன்னாசிபழம், தேன் உற்பத்தியை உலக தரத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க வேண்டும்.

பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தை அரசு தோட்டக்கலை கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். முந்திரி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத பேச்சிப்பாறை அணையை தூர்வாரி நீர்பிடிப்பு அளவை உயர்த்த வேண்டும். பழங்குடியின மக்கள் வசிக்கும் மலை கிராமங்களில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன பத்மநாபபுரம் தொகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது.

பத்மநாபபரம் தொகுதியில் நான்குமுனை போட்டி நிலவினாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக மத்தியில்தான் போட்டி பலமாக உள்ளது. சமுதாய வாக்குகளைத் தாண்டி இளைய தலைமுறையினர், கட்சியினர் இன்றி, நடுநிலையாளர்களின் வாக்குகளை பிடிப்பவர்கள் வெற்றி வாகை சூட வாய்ப்புள்ளது.

வாக்காளர்கள் விவரம்

• ஆண்கள்: 1,17,488.

• பெண்கள்: 1,18,020

• இதரர்: 3

• மொத்தம்: 2,35,511

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்லசுவாமி வாக்கு சேகரித்தார்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in