பழநி ரூ.100 கோடி நில மோசடியில் மூளையாக செயல்பட்டது யார்? - திணறும் சிபிசிஐடி போலீஸ்

பழநி ரூ.100 கோடி நில மோசடியில் மூளையாக செயல்பட்டது யார்? - திணறும் சிபிசிஐடி போலீஸ்
Updated on
2 min read

பழநி: பழநி ரூ.100 கோடி நில மோசடியில் மூளையாக செயல்பட்ட நபரை கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸார் திணறி வருகின்றனர்.

பழநி அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக 2 தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக 88 பேரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை, ஜெயப்பிரகாஷ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பத்திர எழுத்தர் உட்பட மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுவரை நடத்திய விசாரணையில் மிகப்பெரிய கும்பல் ஒன்று சேர்ந்து, பல நாட்கள் திட்டமிட்டு, காத்திருந்து கடந்த ஜூலை 6-ம் தேதி பத்திரப்பதிவு செய்தது தெரியவந்துள்ளது.

சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இடைத்தரகர் ஜெயப்பிரகாஷை ஒருநாள் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில் குற்றம் தொடர்பான உண்மையை சொல்ல மறுத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

போலீஸ் தரப்பில் மேலும் கூறப்படுவதாவது: பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் தங்களுக்கு ஏதும் தெரியாது என்பதை போல சாதாரண வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

அதனால் இன்னும் விசாரணை முழுமை பெறாத நிலையில், மடத்து நிலத்தை அபகரிக்க மூளையாகச் செயல்பட்ட முக்கிய நபரை கண்டுபிடிக்க முடியாத நிலை தொடர்கிறது. ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்வதற்கு முன்பு பல நாட்கள் தொடர்ந்து காவல்நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினோம். அப்போதும் சரியான தகவலை பெற முடியவில்லை.

இடத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள் என இருதரப்பிலும் சரியான நபர்கள் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. நிலத்துக்கு உரிய மதிப்பீடும் செய்யப்படவில்லை. பதிவு செய்த தொகை சட்டரீதியாக விற்றவருக்கும் சேரவில்லை.

ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட பணப்பரிமாற்றம் வங்கியின் மூலம் உண்மையில் நடக்கவில்லை. வங்கியில் பணமும் உரியவரின் கணக்கில் இல்லை. அப்படியெனில் இவர்கள் மட்டுமே சொல்லி ஆவணங்களை சார்பதிவாளர் பதிவு செய்ய வாய்ப்பே இல்லை.

விலை மதிப்புள்ள இடத்தை வாங்கும் தகுதி உரியவர்களிடம் இல்லாததால் முகவர்களாக மட்டுமே செயல்பட்டிருக்க முடியும். அப்படியெனில் பணம், செல்வாக்கு என வலுவான பின்னணி உள்ள யாரோ ஒருவர் மூலமே இந்த பத்திரப்பதிவு நடத்திருக்கும். இதன் முழு பின்னணி குறித்து இதுவரை நடந்த விசாரணையில் வெளிவரவில்லை.

அனைத்து ஆவணங்களும் கைப்பற்றிய நிலையில், பெரிய அளவில் அதிகாரிகள் குழு பல நாட்களாக தொடர் விசாரணை நடத்தியும் முழு உண்மை வெளிப்படாதது ஆச்சரியமளிக்கிறது.

ஜஸ்டின் மணிகண்டன், ஜெயப்பிரகாஷை மீண்டும் குறைந்தது 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதாவது முறைகேட்டில் மூளையாக செயல்பட்டது யார் என்ற விவரம் வெளியாகும் என பார்க்கலாம் என்கிறது போலீஸ் தரப்பு.

பழநி ரூ.100 கோடி நில மோசடியில் மூளையாக செயல்பட்டது யார்? - திணறும் சிபிசிஐடி போலீஸ்
கூடலூர் அருகே ஓவேலியில் புலி தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in