பாலக்கோடு தொகுதியில் விவசாயிகளால் ஜெயிக்கப் போவது யார்?

பாலக்கோடு தொகுதியில் விவசாயிகளால் ஜெயிக்கப் போவது யார்?
Updated on
2 min read

தமிழகத்தின் சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 57-வது தொகுதியாக இடம்பெற்றிருப்பது பாலக்கோடு தொகுதி. 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் பாலக்கோடு, காரிமங்கலம் என 2 ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளன. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் என 3 பேரூராட்சிகளும், 45-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளும் இந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

மண் வளம் மிக்க இந்த தொகுதியின் பிரதான தொழிலே விவசாயம்தான். தக்காளி, கரும்பு, நிலக்கடலை, மலர், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் இந்த தொகுதியில் தீவிரமாக சாகுபடி செய்யப்படுகிறது. கணிசமான பரப்பில் தென்னை சாகுபடியும் நடக்கிறது.

இந்த தொகுதிக்கு உட்பட்ட தென்னந்தோப்புகளில் இருந்து மும்பை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு விற்பனைக்காக இளநீர் அனுப்பப்படுகிறது. பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று இயங்குகிறது.

இந்த தொகுதியில் வன்னியர் சமூக வாக்காளர்கள் 43 சதவீதம், கொங்கு வேளாளர் 30.5 சதவீதம், பட்டியல் சமூகத்தினர் 12 சதவீதம், இஸ்லாமியர்கள் 5 சதவீதம் மற்றும் மலைவாழ் இனத்தவர், போயர், செட்டியார், நாடார், உடையார், ஒக்கிலிகர், குரும்பர், கிறிஸ்தவர்கள் ஆகிய இதர வகுப்பைச் சேர்ந்தவர்கள் 9.5 சதவீதம் பேர் உள்ளனர்.

தொகுதியின் பிரச்சினைகள்

தொகுதியில் பஞ்சப்பள்ளி (சின்னாறு), கேசர்குளி, தும்பலஅள்ளி என 3 அணைகள் உள்ளன. இருப்பினும், தொகுதியில் நிறைவான நீர்வளம் இல்லை. இதனால் கரும்பு சாகுபடி வேகமாக குறைந்து வருகிறது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆண்டின் குறிப்பிட்ட சில மாதங்கள் வரை இயக்கிட போதுமான அளவில் கரும்பு சாகுபடி இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக சம்பிரதாய நிகழ்வாக மட்டுமே சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை செய்யப்படுகிறது. நீர்வளக் குறைவால் இதர பயிர்களின் சாகுபடியும் நிறைவாக மேற்கொள்ள முடிவதில்லை.

எனவே, தென்பெண்ணை ஆற்றில் அலியாளம் பகுதியில் இருந்து கால்வாய் மூலம் தூள்செட்டி ஏரிக்கு உபரி நீரைக் கொண்டுவந்து இதர ஏரிகளை நிறைப்பது, ஜெர்த்தலாவ் கால்வாய் மூலம் புலிகரை வரை ஏரிகளுக்கு நீர் வழங்குவது, பெண்ணையாற்றில் எண்ணேகோல்புதூர் பகுதியில் இருந்து கால்வாய் மூலம் தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவது, தொல்லைக்காது பகுதியில் சிறிய அணை கட்டுவது ஆகிய திட்டங்களின் மூலம் தொகுதியின் நீராதாரத்தை மேம்படுத்த முடியும்.

அதிக அளவில் தக்காளி சாகுபடியாகும் இந்தத் தொகுதியில், தக்காளியின் விலைச் சரிவு காலங்களில் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தக்காளியைக் கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை அரசு நிறுவ வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள காரிமங்கலம் அரசு மருத்துவமனையை வட்டார தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி அரசியல்

பாலக்கோடு தொகுதியில் 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுக-வைச் சேர்ந்த கே.பி.அன்பழகன் தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். 2 முறை தமிழக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் 2 முறை, திமுக 2 முறை வென்றுள்ளபோதும் அதிமுக இத்தொகுதியில் அதிக முறை வென்றுள்ளது.

கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 70 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.கே.முருகன் 81 ஆயிரத்து 970 வாக்குகளும் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் 7,704 வாக்குகள், தேமுதிக வேட்பாளர் விஜயசங்கர் 2,409 வாக்குகள், மநீம வேட்பாளர் ராஜசேகர் 1,176 வாக்குகளும் பெற்றனர்.

தற்போது, திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார், தருமபுரியின் முன்னாள் எம்.பி ஆவார். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் திட்டங்கள், கட்சியின் பலம் மற்றும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், தேமுதிக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு ஆகியவை இவரது பலமாக பார்க்கப்படுகிறது. மிக நீண்ட காலம் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த கே.பி.அன்பழகன் நிறைவேற்றாத நீர்ப்பாசன திட்டங்கள், இதர வளர்ச்சிகளை கொண்டு வந்து சேர்ப்பேன் என்ற வாக்குறுதியுடன் பிரச்சார களத்தில் சுழன்று வருகிறார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி.அன்பழகன், தொகுதி முழுவதும் பரிச்சயமானவர். அவர் அமைச்சராக இருந்த காலத்தில் காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் அமையவும், அனுமந்தபுரம் பகுதியில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் அமையவும் காரணமாக இருந்துள்ளார்.

2016-2021 அதிமுக ஆட்சியின் இறுதி காலத்தில் தொகுதிக்கான நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கி பூமி பூஜையுடன் பணி தொடங்கப்பட்ட நிலையில் அதன் பிறகு வந்த திமுக அரசு அப்பணிகளை கிடப்பில் போட்டுவிட்டது.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியுடன் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொகுதியில் செல்வாக்குடன் உள்ள பாமக-வும் கூட்டணியில் இருப்பது, பாஜக, தமாகா, அமமுக ஆகிய கட்சிகளின் ஆதரவும் அவரது பலமாக பார்க்கப்படுகிறது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,19,611

பெண் - 1,17,845

மூன்றாம் பாலினத்தவர் - 20

மொத்த வாக்காளர்கள் - 2,37,476

பாலக்கோடு தொகுதியில் விவசாயிகளால் ஜெயிக்கப் போவது யார்?
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in