மக்கள் ஆதரவு யாருக்கு? - சிவகங்கையில் சர்வே எடுக்கும் காங்கிரஸ்

மக்கள் ஆதரவு யாருக்கு? - சிவகங்கையில் சர்வே எடுக்கும் காங்கிரஸ்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிய காங்கிரஸார் சர்வே எடுக்க முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது தவெகவுடன் கூட்டணிவைப்பதா என்பது குறித்து புதுடெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆனால், இதுவரை காங்கிரஸ் தலைமை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இதனால் தலைமை என்ன முடிவு எடுக்க போகிறது என்ற குழப்பம் காங்கிரஸார் இடையே நிலவி வருகிறது. மேலும் திமுக கூட்டணியில்தான் தொடர்வோம் எனக் கூறி வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. திடீரென விஜய்க்கு ஒதுக்கிய 'விசில்' நல்ல சின்னம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ஸ் 'மெசேஜ்' அனுப்பியிருந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸுக்கு கனிசமான வாக்குகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றபோது கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் 2,44,244 வாக்குகள் பெற்றார். அதற்கு அடுத்த படியாக சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் 1,04,678 வாக்குகள் பெற்றார்.

2021ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக பெற வேண்டிய வாக்குகளில் சேதத்தை ஏற்படுத்திய அமமுக தற்போது அதிமுகவுடன் கைகோத்துள்ளது. அமமுகவுக் கும் கணிசமான வாக்குகள் இருப்பதால், சிவகங்கை மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை கணிக்க முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸார், 'யாருக்கு வாக்களிப்பீர்கள்' என்ற படி வங்களை மக்களிடம் கொடுத்து சர்வே எடுக்க உள்ளனர். அந்த படிவத்தில் ஸ்டாலின், ராகுல் புகைப்படங்களுடன் திமுக, காங்கிரஸ் கூட்டணி, பழனிசாமி, மோடி புகைப்படங்களுடன் அதிமுக, பாஜக கூட்டணி, விஜய் புகைப்படத்துடன்தவெக, சீமான் புகைப்படத்துடன் நாம் தமிழர் கட்சி ஆகிய 4 கட்டங்கள் உள்ளன.

இந்த சர்வே மூலம் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட மக்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளனர். என்பதை அறிய காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

மக்கள் ஆதரவு யாருக்கு? - சிவகங்கையில் சர்வே எடுக்கும் காங்கிரஸ்
Swathi Mutthina Male Haniye: மரணப் பரிசாக வந்த பிரேரனா | திரை தேவதைகள் 02

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in