

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று மார்தட்டிய திமுக, படுதோல்வியை சந்தித்துள்ளது. பதவியேற்பு முன்னேற்பாடுகள், அடுத்த அமைச்சரவை பட்டியல் என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அறிவாலயம் தற்போது மயான அமைதியில் ஆழ்ந்துள்ளது.
கார்ப்பரேட் குழுவான பென் டீம், உளவுத் துறையை முழுமையாக நம்பிய திமுக தலைமை, எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே இப்போதும் வரும் என்ற அதீத நம்பிக்கையில் மாட்டிக் கொண்டதுதான் முதல் சறுக்கல்.
களத்தில் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலை வீசுவதை அவர்கள் முழுமையாக உணரவில்லை. எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன, நமக்கு லாபம்தான் என கணக்கு போட்டனர். ஆனால், தேர்தலில் திமுகவுக்கு எதிராக பதிவான சுமார் 60 சதவீத வாக்குகள், மக்களின் கோபத்தை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது.
தவெகவை குறைத்து மதிப்பீடு
அது வெறும் ரசிகர் கூட்டம், வாக்குகளாக மாறாது என விஜய்யின் தவெகவை திமுக முன்னணி தலைவர்கள் தொடர்ந்து கிண்டல் செய்ததும், குறைத்து மதிப்பிட்டதும் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இளைஞர்கள், பெண்கள் மத்தியில் தவெக ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை கணிக்க வியூகக் குழுக்களும், உளவுத்துறையும் கோட்டைவிட்டுவிட்டன.
கைகொடுக்காத மெகா கூட்டணி
எங்கள் கூட்டணியில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கூட்டணிக் கணக்கே எங்களைக் கரையேற்றும் என நம்பினார் ஸ்டாலின். ஆனால், அந்த கணக்கு காகிதத்தில் இருந்ததே தவிர, களத்தில் வேலை செய்யவில்லை.
திமுக தனது வழக்கமான 24 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. தேமுதிக, காங்கிரஸ், விசிக போன்ற கூட்டணி கட்சிகள் வாக்குகள் திமுகவுக்கு முழுமையாக டிரான்ஸ்பர் ஆகவில்லை.
கார்ப்பரேட் ஆதிக்கம்
திமுகவின் மிகப்பெரிய பலமே அதன் நிர்வாக கட்டமைப்புதான். ஆனால், 2021 தேர்தலில் ஆட்சிக்கு எதிரான அலையில் பெற்ற வெற்றியை ஐபேக் நிறுவன உதவியுடன் வென்றதாக நம்பியதே திமுகவின் தவறாகும்.
அதன் தாக்கமாக உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் குழுவான பென் டீம்மை முழுமையாக நம்பி திமுக தலைமை செயல்பட்டது. ஆட்சி நிர்வாகம் தொடங்கி தேர்தல் வேட்பாளர் வரை அனைத்து பணிகளிலும் அதன் தலையீடு இருந்தது.
அவர்கள் கொடுத்த தரவுகளை வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளை செய்தது. இதனால் காலங்காலமாக உழைத்த உடன் பிறப்புகளின் கருத்துகளுக்கு அங்கே மதிப்பில்லாமல் போனது.
மேலும், திமுகவின் தோல்விக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ‘பெரியண்ணன்’ மனப்பான்மையும் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. ‘எங்களை மீறி மாவட்டத்தில் எதுவும் நடக்காது” என்ற ரீதியில் அவர்கள் செயல்பட்ட விதம் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை சம்பாதித்தது.
சொதப்பலான வேட்பாளர் தேர்வு
பென் டீம் ரிப்போர்ட் மற்றும் குடும்ப உறவுகளின் ஆதிக்கத்தால் வேட்பாளர்களைத் தேர்வு செய்ததில் பல்வேறு இடங்களில் திமுக தலைமை கோட்டைவிட்டது. துரைமுருகன் தொடங்கி பல்வேறு சீனியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது கட்சிக்குள் அதிருப்தியானது.
சிட்டிங் எம்எல்ஏக்கள் 31 பேருக்கும், 2 அமைச்சருக்கும் மீண்டும் சீட் தரப்படவில்லை. இவர்களில் பலர் வெளிப்படையாகவே உள்ளடி வேலைகளில் ஈடுபட்டனர்.
காலை உணவுத் திட்டம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை அரசு கொண்டு வந்தும், அதை மக்களிடம் கொண்டுசேர்க்க திமுக தவறவிட்டது.
சுமார் ரூ.600 கோடியில் பல திட்டங்களை மேற்கொண்டும் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தோற்றதே அதற்கு சான்றாகும். ரூ.1,000 உரிமைத் தொகை, இலவச பேருந்துப் பயணம் என பல்வேறு நலத்திட்டங்களை மகளிருக்காக அரசு கொண்டுவந்தாலும், அவை வாக்குகளாக மாறவில்லை.
காரணம், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள். குறிப்பாக, அதிகரித்த போதைப்பொருட்கள் நடமாட்டம் மற்றும் மகளிருக்கு எதிரான தொடர் குற்றச் சம்பவங்கள் பெண்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தின.
உடன்பிறப்புகளின் வியர்வையை நம்பிய வரை திமுக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. எப்போது கார்ப்பரேட் கம்பெனிகள் தரவுகளை நம்பத் தொடங்கியதோ, அன்றே அஸ்திவாரம் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. இந்த தேர்தல் முடிவுகள் முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுகவுக்கும் சுயப்பரிசோதனை செய்து கொள்வதற்கான ஒரு மாபெரும் எச்சரிக்கை மணியாகும்.