8,431 காவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட் கேள்வி

8,431 காவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட் கேள்வி
Updated on: 
1 min read

சென்னை: ‘8 ஆயிரத்து 431 இரண்டாம் நிலை காவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில், அரசின் நிலைப்பாடு என்ன?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்றும், அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அது அமலில் உள்ளது.

இதனால், புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே காவல் துறைப் பணிக்கு விண்ணப்பித்திருந்தும், அதன்பிறகு பணியில் சேர்ந்த 8 ஆயிரத்து 431 இரண்டாம் நிலைக் காவலர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இதையடுத்து, தங்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் காவலர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 8 ஆயிரத்து 431 காவலர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

காவலர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் எட்வின் பிரபாகர், ‘‘மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், 2003-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதிக்கு முன்பாக மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்திருந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க ஒருமுறை வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுபோல ஆந்திர அரசும் உத்தரவிட்டுள்ளது. அதுபோல, காவலர்களின் நீண்டகால வாழ்வாதாரம் மற்றும் ஓய்வூதிய உரிமையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அரசு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை வருகிற டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

8,431 காவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட் கேள்வி
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்த தகவல் வெளியிட கோரி வழக்கு

X