தவெக தலைவர் விஜய் சீண்டலுக்கு அதிமுக ரியாக்‌ஷன் என்ன? - ஒரு விரைவுப் பார்வை

தவெக தலைவர் விஜய் சீண்டலுக்கு அதிமுக ரியாக்‌ஷன் என்ன? - ஒரு விரைவுப் பார்வை
Updated on
2 min read

மதுரை: ஆரம்பத்தில் திமுகவை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்து வந்த விஜய், சமீப காலமாக அவ்வப்போது அதிமுகவையும் மறைமுகமாக சீண்டி வருகிறார். கடைசி நேரத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற யோசனையில், தற்போது வரை தவெகவையும், அதன் தலைவர் விஜய்யையும் மறந்தும் கூட அதிமுக விமர்சனம் செய்யவதில்லை. ஆனால், விஜய்யின் பேச்சையும், அவரது அரசியல் நடவடிக்கைகளையும் பார்க்கிறபோது, தேர்தல் நேரத்தில் இரு திராவிட கட்சிகளையும் விஜய் இன்னும் கடுமையாக எதிர்க்கத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று ஈரோடு பெருந்துறையில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசுகையில், “அண்ணா, எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்வதற்கு உரிமையில்லை. அவர்கள் தமிழகத்தின் சொத்து. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று சொல்வது உண்மைதான். அண்ணன் செங்கோட்டையன் நம்முடன் வந்து சேர்ந்தது நமக்கு பெரிய பலம். அவரைப் போல் இன்னும் நிறைய பேர் சேர இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுப்போம்” என்றார்.

விஜயின் இந்தப் பேச்சு, அதிமுக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், ஒவ்வொரு மேடையிலுமே ‘திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி’ என தேர்தல் களத்தில் அதிமுக முன்னிலையில் இல்லாதது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் பேசுவதை விஜய் தவறுவதே இல்லை.

“ஏன் நிர்வாகிகள் இன்னும் தவெகவுக்கு பதிலடி கொடுக்காமல் அமைதி காக்கிறார்கள்” என்று அதிமுக தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். ‘இன்னும் நிறைய பேர் வருவார்கள்’ என விஜய் சும்மா கொளுத்திப் போட்டு சென்றாரா அல்லது அவரிடம் அதிமுகவை சேர்ந்தவர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்களா என்ற கேள்வியும் இப்போது அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இது குறித்து அதிமுக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, “தலைமைக் கழகத்தில் மனு கொடுக்க வருவோர் குவிந்து வருகிறார்கள். பொதுச் செயலாளர் பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சாதாரண தொண்டன் முதல் நிர்வாகிகள் வரை போட்டிப் போட்டு ஆர்வமாக மனு கொடுக்கிறார்கள்.

விருப்ப மனு பெறுவது அதிமுகவில் எழுச்சியாக திருவிழா போல் உள்ளது. அவர்கள் (விஜய்) தங்கள் கட்சியை பெருமைப்படுத்துவதற்காக சில கருத்துகளை சொல்வார்கள். தனது கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக செல்வார்கள். பெரிதுபடுத்த வேண்டாம்.

இந்தக் கருத்தை செங்கோட்டையனும் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால், இதுவரை யாராவது அங்கு போய் சேர்ந்தார்களா? இதுவரை அவரை நம்பி யாரும் செல்வில்லை. இனிமேலும் சேரமாட்டார்கள்.

பாதை தவறி சென்றவர்களால் சரியான அரசியல் பாதையை அமைத்துக் கொடுக்க முடியாது, காட்டவும் முடியாது என்பது அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

அவர்கள் (தவெக) ஆரம்பத்தில் தொண்டர்களை நம்பி கட்சியை தொடங்கிறார்கள். தற்போது மாற்றுக் கட்சி தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள் என்றால், கரூர் சம்பவத்துக்கு முன் அவரது (விஜய்) பேச்சுக்கும், கரூர் சம்பவத்துக்குப் பின்பு அவரது பேச்சுக்கும் நிறைய மாறுபாடு ஏற்பட்டுள்ளது. தொண்டர்களின் நம்பிக்கையை பெற முழு கவனமாக பேசுகிறார்கள்” என்றார்.

தவெக தலைவர் விஜய் சீண்டலுக்கு அதிமுக ரியாக்‌ஷன் என்ன? - ஒரு விரைவுப் பார்வை
“திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி” - ஈரோட்டில் விஜய் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in