“திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி” - ஈரோட்டில் விஜய் பேச்சு

“திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி” - ஈரோட்டில் விஜய் பேச்சு
Updated on
2 min read

சென்னை: “24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியது: “நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் வைத்து தான் தொடங்குவார்கள். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு. விவசாயத்துக்கு கவசமாக உள்ளது காளிங்கராயன் அணை. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

பெற்ற தாய் தரும் தைரியத்தை நண்பா, நண்பிகள், தோழர்கள், தோழிகள் தருகிறார்கள். அதனை கெடுக்க சூழ்ச்சி செய்ய சிலர் செய்கின்றனர். சூழ்ச்சிக்காரர்களுக்கு தெரியாது, இது 30 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கின்ற உறவு. உங்களை நம்பி தான் வந்திருக்கிறேன், வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருப்பேன். எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ள இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள்.

ஈரோடு கடப்பாரை பெரியார்; தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட சீர்திருந்த நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். ஈரோடு மாவட்டத்தில் பிறந்த பெரியார்தான், இந்தியாவுக்கே இட ஒதுக்கீடு சம்பந்தமான அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான போராட்டத்தை நடத்தியவர்.

நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை, இலவசம் என்று சொல்லி, அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை எப்படி, இலவசம் என்று சொல்கிறீர்கள்? மக்களுக்கான சலுகைகளை ஓசி ஓசி என கூறி அசிங்கப்படுத்துகின்றனர், கேட்பதற்கு ஆள் இல்லை என மக்களுக்கான சலுகைகளை கேவலப்படுத்துகிறீர்களா?

காஞ்சிபுரத்தில் நான் பேசியதை பற்றி தவறாக அவதூறு பரப்பினார்கள். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் என்ன என்ன செய்கிறார்கள். பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிக்காதீர்கள். நமது அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜக. தவெக ஒரு பொருட்டில்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?.

கொள்ளையடித்து வைத்துள்ள பணம்தான் உங்களுக்குத் துணை; ஆனால் எனக்கு என்மேல் எல்லையில்லா பாசம் வைத்திருக்கிற இந்த மாஸ் தான் துணை. எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம்.

அண்ணா, எம்ஜிஆர் பெயரை நாங்கள் பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. அவர்கள் அனைவருக்குமான சொத்து. அண்ணா, எம்ஜிஆர், பெரியாரின் கொள்கைகளில் தேவையானதை நாங்கள் எடுத்துக் கொண்டோம். அதுவும் 2026 தேர்தலில், களத்தில் இருப்பவர்களைதான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்க முடியாது.

எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். நீட் ரத்து, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்று அடித்து விட்டார்கள். இன்றுவரை ஏதாவது செய்தார்களா? இவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான்.

மக்களின் பிரச்சினையை பேசினால் நமது பக்கம் திரும்பி விடுவார்கள். விஜய் அரசியலே பேச மாட்டாரா? விஜய் சினிமா டயலாக் பேசுகிறார்; பஞ்ச் டயலாக் பேசுகிறார்; விஜய் 10 நிமிஷம் தான் பேசுகிறார், 9 நிமிஷம் தான் பேசுகிறார் என்பார்கள். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள். நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா... 271 அரசு பள்ளிகள் மூடியது யாருடைய ஆட்சியில்? ஒரு லட்சம் காலி பணியிடங்களையாவது திமுக ஆட்சி நிரப்பியதா?. சட்டம்-ஒழுங்கு சிறப்பாகவா இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் நாடே சந்தி சிரிக்கிறது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் சமரசமே இருக்காது. முதல்வர் பேசினால் சினிமா டயலாக் இல்லையாம். நான் பேசினால் மட்டும் சினிமா டயலாக். தமிழகத்தில் ஆட்சி செய்கிற திமுகவும், ஒன்றியத்தில் ஆட்சி செய்கிற அவர்களும் சரி முதலில் என்னுடைய கேரக்டரை புரிந்துகொள்ள வேண்டும்.

24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. வராது என்றால் அப்படி இல்லை. உங்களை விட எனக்கு நன்றாகவே வரும். வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கிறேன். பின்னர், நமக்குள் என்ன வித்தியாசம் இருக்கும்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையால் திமுகவை காலி செய்தார்கள். அவர்கள் ஏன் இவ்வளவு கடினமாக பேசுகிறார்கள் என்று அப்போது சிந்தித்தேன், இப்போதுதான் புரிகிறது. திமுக ஒரு தீய சக்தி தவெக. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி. 2026-ம் ஆண்டு தேர்தலில் தீய சக்தி திமுகவிற்கும், தூயசக்தி தவெகவிற்கும்தான் போட்டியே.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கட்சிக்கு மிகப் பெரிய பலம். அவரைப் போல இன்னும் நிறைய பேர் தவெகவில் வந்து சேர இருக்கிறார்கள், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும்” என்று விஜய் பேசினார்.

“திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி” - ஈரோட்டில் விஜய் பேச்சு
“எம்ஜிஆருக்கு அடுத்தது விஜய் தான்!” - செங்கோட்டையன் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in