தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன? அரசு என்ன கூறுகிறது? - இது குறித்து சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தின் மிக முக்கிய பொதுத்துறை நிறுவனமாக விளங்குவது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(விழுப்புரம்) லிட்., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்பகோணம்) லிட்., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட்., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்) லிட்., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., மாநகர போக்குவரத்துக் கழகம் லிட்., அரசு விரவு போக்குவரத்துக் கழகம் லிட். என மொத்தம் எட்டு நிறுவனங்கள் இதில் உள்ளன.
இவற்றுக்கு சொந்தமாக 20,000-க்கு மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இவற்றில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசு பேருந்துகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 1.7 கோடி பயணிகள் பயணிக்கின்றனர்.
அந்த வகையில், தமிழகத்துக்கான மிக முக்கிய போக்குவரத்து கட்டமைப்பை தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. இவ்வளவு பெரிய கட்டமைப்பைக் கொண்ட நிறுவனமாக, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பயணிகளுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக இருந்தபோதிலும், இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் சந்தித்து வரும் சவால்கள் மிகவும் சோகமானவை.
குறிப்பாக, 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பலன்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேளனம், சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், ‘‘2024-ம் ஆண்டு ஜூலை வரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. அதேநேரத்தில், அதன் பிறகு ஓய்வுபெற்ற சுமார் 3,000 பேருக்கு இன்னமும் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை. ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை ஒவ்வொரு தொழிலாளருக்கும் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த தொகை அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகைதான். ஆனால், அரசு இதை செலவு செய்துவிட்டது. பொங்கலுக்குள் தருவதாக அரசு உறுதி அளித்திருக்கிறது. பொங்கலும் நெருங்கிவிட்டது.
இதேபோல், 15-வது ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 9 மாதங்களுக்கான ஊதிய உயர்வு பாக்கி உள்ளது. போக்குவரத்து துறையில் 20,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை அரசு இன்னமும் நிரப்பவில்லை. இதனால், வேலைப் பளு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். அரசு விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, பணியின்போது உயிரிழந்த ஏராளமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு இன்னும் வேலை கொடுக்கப்படவில்லை.
பணியில் இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்திருக்கிறோம். அரசு பணியாளர்கள் மற்றும் பணிபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவக் காப்பீடு அடுத்த ஆண்டு வரை உள்ளது. எனவே, அதன் பிறகு மருத்துவக் காப்பீடு புதுப்பிக்கப்படும்போது, ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு பிரச்சினைகளை தொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள். ஒவ்வொன்றையும் அந்தந்த நேரத்தில் நாங்கள் எழுப்பி வருகிறோம்’’ என தெரிவித்தார்.
அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளர் கமலக்கண்ணனிடம் பேசியபோது, ‘‘இந்த அரசிடம் ஒவ்வொன்றையும் போராடி போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது. ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான பஞ்சப்படி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்கள். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதை அடுத்தே, இந்த பஞ்சப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதிலும் கூட இன்னமும் கொஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால், கொடுத்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், அது நீதிமன்ற அவமதிப்பாக ஆகிவிடும்.
2024-ல் இருந்து சுமார் ஒன்றரை ஆண்டுகாலத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கான பணப்பலன்கள் இன்னமும் வழங்கப்படவில்லை. பணப்பலன்களை வழங்குவது தொடர்பாக அரசு பல வாக்குறுதிகளை அளித்துவிட்டது. ஆனால், அந்த வாக்குறுதிகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. கொடுக்க முடியாது என சொல்ல முடியாது என்பதால், காலம் தாழ்த்திக் கொண்டே செல்கிறார்கள்.
ஊதிய ஒப்பந்தத்தை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக் காலத்தின்போது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று இருந்தது. அதை இவர்கள் 4 ஆண்டுகளாக உயர்த்தினார்கள். ஆனால், அதையும் அரசு பின்பற்றவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் 16% மற்றும் 23% என ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களிலும் 5% உயர்வுதான் போடப்பட்டுள்ளது.
தற்போது அரசு போக்குவரத்துத் துறை தனியார் மயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, மின்சார பேருந்துகள் அனைத்துமே இந்துஜா குழுமத்துக்குச் சொந்தமானவை. அவற்றுக்கான ஓட்டுநளும் நடத்துனர்களும் ஒப்பந்த அடிப்படையில்தான் நியமிக்கப்படுகிறார்கள். வாட்ச்மேன்கள்கூட ஒப்பந்த பணியாளர்கள்தான். பேருந்து நிறுத்தும் இடம் மட்டும் அரசு போக்குவரத்துக் கழக இடம். அந்த பேருந்துகளுக்கான வாடகையும் அதிகம். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 80 என நாள் ஒன்றுக்கு ரூ.16,000 வாடகை தர வேண்டும். அதாவது, நாள் ஒன்றுக்கு 200 கிலோ மீட்டருக்கு பேருந்தை ஓட்டியாக வேண்டும். ஆனால், நாள் முழுக்க ஓட்டினாலும் பேருந்து கட்டணம் மூலம் ரூ.7,000 வரைதான் வரும். ஆனால், பேருந்து ஓடினாலும் ஓடாவிட்டாலும் இந்துஜா குழுமத்துக்கு அரசு நாள் ஒன்றுக்கு ரூ.16,000 கொடுக்க வேண்டும்.
இதனால், ஒரு பேருந்துக்கு ஒரு நாளைக்கு அரசுக்கு ரூ.9,000 வரை இழப்பு. அப்படியானால் 600 பேருந்துகளுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள். இந்த ஒப்பந்தமும் 12 வருடங்களுக்கு போடப்பட்டுள்ளது. இப்படி இருந்தால், போக்குவரத்துக் கழகம் எப்படி மேம்படும். இந்த ஆட்சியில், போக்குவரத்துத் துறை தனியார் மயத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தார்கள். தற்போது 9 ஆயிரம் பேர் குறைவாக இருக்கிறார்கள்.
தொழிலாளர்கள் பற்றாக்குறையால், கூடுதல் நேரத்துக்கு பணிபுரிய வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிவிட்டது. 40 வருடத்துக்கு முன்பு சென்னையின் ஐயப்பன் தாங்கலில் இருந்து தங்கசாலைக்கு 55 நிமிடம் என நேரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் பழைய நேர நிர்ணயமே அமலில் உள்ளது. இதனால், 8 சிங்கிள் செல்ல வேண்டிய பேருந்து 6 சிங்கிள்தான் செல்கிறது.
ஆனால், அதிகாரிகள் வற்புறுத்தலால் பேருந்துகள் 8 சிங்கிள் செல்ல வேண்டி உள்ளது. இதனால், நேரம் மாறி மாறி பேருந்துகள் செல்கின்றன. சமயத்தில், ஒரே நேரத்தில் ஒரே வழித்தடத்தில் தொடர்ச்சியாக 4 பேருந்துகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு, எரிபொருள் செலவும், தேய்மான செலவும் அதிகமாகிறது.
மருத்துவக் காப்பீடும் சரியில்லை. குரூப் இன்சுரன்ஸ் என்ற பெயரில் மொத்தமாக காப்பீடு வழங்குகிறார்கள். ஒரு தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அவர் ஏதாவது ஒரு தனியார் மருத்துவமனையில் சேர முடியாது. முதலில், அதிகாரியைப் போய் பார்க்க வேண்டும். பிறகு, அவர் பரிந்துரைக்கும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அங்கும், சில நோய்களுக்கு மட்டும்தான் காப்பீடு உண்டு என கூறுகிறார்கள். இதனால், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கிறார்கள். ரூ. 5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு என்றால், எந்த நோயாக இருந்தாலும் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு இருக்க வேண்டும். இது குறித்து இந்த அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. அதிமுக ஆட்சி வந்தால் நாங்கள் நிச்சயம் அதை செய்வோம்’’ என தெரிவித்தார்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் லாபத்தில் இயங்கவில்லை. நஷ்டத்தில்தான் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இழப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், தொழிலாளர்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதோடு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.