

`சென்னை சூப்பர்-6' எனும் திராவிட மாடல் 2.O வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னைக்கான பிரத்யேக வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். சென்னையி்ல் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும் என்பது உட்பட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் வாக்குறுதி அறிக்கையை கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கடந்த மார்ச் 29-ம் தேதி வெளியிட்டார்.
அதில், மகளிருக்கு ரூ.8000 மதிப்புள்ள பரிசு கூப்பன், 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள், 10 லட்சம் புதிய வீடுகள், 8-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் விரிவாக்கம், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக அதிகரிப்பு, 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி என 50 பிரிவுகளின் கீழ் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், குறிப்பாக சென்னை மாநகரின் தேவைகளை கருத்தில் கொண்டு ‘சென்னை சூப்பர்-6’ என்ற பெயரில் திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகளை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். கையேட்டின் முதல் பிரதியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உட்பட சென்னை மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொது வசதிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு என மொத்தம் 6 பிரிவுகளில் இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதில் உள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில், குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அதிஒளி விளக்குகள் அமைக்கப்படும். கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவமான உலகத் தர பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.
பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள், ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பயண நேரத்தை 25 சதவீதம் வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
எண்ணூர் - பூஞ்சேரி எல்லை சாலை திட்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டம் 2027-க்குள் முடிக்கப்படும். மெட்ரோ விரிவாக்கப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் 2028-க்குள் நிறைவேற்றப்படும்.
ஏஐ, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், இமெர்சிபில் டெக்னாலஜீஸ் ஆகியவற்றுக்கு சிறப்பு மையம் அமைக்கப்படும். இதில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு 20 ஆயிரம் உயர் ஊதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.