

சென்னை: ‘டெங்கு தடுப்புக்காக பள்ளிகளில் வாரந்தோறும் புதன்கிழமை சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மற்றும் கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அனைத்து பள்ளி வளாகங்களிலும் கழிவுகள் தேங்குதல், தேவையற்ற பொருட்கள் குவிந்து கிடத்தல், மழை நீர் தேங்குதல் ஆகியவற்றை முழுவதும் தவிர்க்கும் வகையில் தொடர் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ‘மாபெரும் தூய்மை புதன்கிழமை’ என்ற சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தூய்மைப் பணிகள் மற்றும் கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட, வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களால் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்காணித்து அரசுக்கு அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று முன்தினம் சென்னையில் சுமார் 100 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 301 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை டெங்கு பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பிறகு டெங்கு பாதிப்பு மேலும் உயரும் என்பதால், சுகாதாரத்துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.