

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக பொறுப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் (ஏஏஐ) இருந்து வேறு ஒரு திறமையான நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் விஜய் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (ஏஏஐ) மாற்றி, வேறு அமைப்பிடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆக.5-ம் தேதி பிரதமருக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தின் நகல் தற்போது வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையம் பயணிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளது. ஏஏஐ தரவுகளின்படி, 2026 ஏப்ரல் நிலவரப்படி பயணிகள் போக்குவரத்தில் சென்னை 6-வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
சரக்கு போக்குவரத்திலும் சென்னை விமான நிலையம் பின்தங்கியுள்ளது. இது விமான நிலையத்தின் முழுத் திறனும் பயன்படுத்தப்படாமல் வீணாவதையே காட்டுகிறது. விமான நிலையத்தில் கழிவறைகள், பயணிகள் இருக்கைகள், குளிர்சாதன வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடுகள் உள்ளன.
எனவே, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம், மேலாண்மை மற்றும் எதிர்கால மேம்பாட்டுப் பணிகளை, ஏஏஐ அல்லாத வேறு தகுதியான நிறுவனத்திடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பிரதமர் அலுவலகம் நடவடிக்கை: இந்த கடிதம் குறித்து, ஆக.14-ம் தேதி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலருக்கு பிரதமர் அலுவலக இயக்குநர் சந்திர மோகன் தாக்கூர் விளக்கம் கோரியுள்ளார். அதில், முதல்வரின் இந்தக் கடிதம் தொடர்பாக அமைச்சகம் தனது கருத்துகளையும், பதிலையும் பிரதமர் அலுவலகத்துக்கு விரைவில் சமர்ப்பிக்கவும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.