

சென்னை: ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இதனால் கோயில்களில் மக்களின் கூட்டமும், மேள தாளங்களின் சத்தமும் விண்ணைத் தொட்டது. பொதுவாக, ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படும் என்பதால், ஆவணி மாதம் பிறந்தவுடன் திருமணங்கள் நடத்த மக்கள் ஆர்வம் காட்டுவர்.
அந்த வகையில், ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளான நேற்று, அதிகாலை முதலே கோயில்களில் திருமண ஜோடிகளின் வருகை அதிகரித்தது.
இறைவனின் சந்நிதானத்தில் இல்லற வாழ்வைத் தொடங்கினால் மகிழ்ச்சியும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் கோயில்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அந்தவகையில், சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 64 ஜோடிகள் மணமுடித்தனர். மண்டபங்கள் நிரம்பியதால் கோயில் வளாகத்திலேயே அடுத்தடுத்து திருமணங்கள் நடைபெற்றன.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 78 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
சென்னை புறநகரில் உள்ள திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பதிவு செய்யப்பட்டு 90 திருமணங்களும், பதிவு செய்யப்படாமல் 50 திருமணங்களும் என ஒரே நாளில் 140 ஜோடிகள் திருமணம் செய்தனர்.
குன்றத்தூர் முருகன் கோயிலிலும் வழக்கத்தை விட 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கூட்டம் அலைமோதியது. வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 33 ஜோடிகளுக்கு திருமணங்கள் விமர்சையாக நடைபெற்றன.
இதேபோல், சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று மொத்தமாக சுமார் 250-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
ஒரே நாளில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றதால், மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் கோயில்களில் திரண்டனர்.
இதன் காரணமாக வடபழனி, திருத்தணி மற்றும் திருப்போரூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றன.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் காவல்துறையினர் மற்றும் கோயில் பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சில இடங்களில் போதிய முன்னேற்பாடுகள் இல்லை என்ற புகார்கள் எழுந்தாலும், மேள தாளங்கள் மற்றும் நாதஸ்வர இசையுடன் கோயில்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன.