

சென்னை: அதிக கழிவுகளை உருவாக்குவோர் செப்.1 முதல் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து வழங்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆணையர் சமீரன் பேசியதாவது: அதிக திடக்கழிவுகளை உருவாக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஓட்டல்கள் உள்ளிட்டோர் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே வகை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செப்.1-ம் தேதி முதல் அதிகளவில் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் கட்டாயம் திடக்கழிவை வகை பிரித்து வழங்க வேண்டும். மீறுவோருக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல, குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் குப்பைகளை வகை பிரித்து வழங்க விழிப்புணர்வுப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தெற்கு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களிடையே குப்பைகளை வகை பிரித்து வழங்குவது தொடர்பாக வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, வடக்கு, மத்திய வட்டாரங்களிலும் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பெருங்குடி குப்பை கிடங்கில் முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் குப்பைகளை அகற்றும் பணி முடிக்கப்பட்டு 94 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக 5.50 லட்சம் டன் குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு இதில் 28 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதேபோல் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 66 லட்சம்டன் குப்பைகள் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு இதுவரை 44 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் 16 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இப்பணிகளை கண்காணித்து விரைந்து முடிக்க வேண்டும். அத்திப்பட்டு குப்பை கிடங்கில் முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் 1 லட்சம் கன மீட்டர் குப்பைகள் அகற்றப்பட்டன.
2-ம் கட்டமாக 72 ஆயிரம் டன் குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு, இதில் 36 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் துணை ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.