

சென்னை: தமிழகத்தில் கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை (ஆக.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.19) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆக.20 முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஆக.23, 24 தேதிகளில் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (ஆக.19) முதல் 22-ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச 82 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
மழைப் பொழிவு:
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் தலா 4 செ.மீ, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 3 செ.மீ, மதுரை மாவட்டம் கள்ளந்திரி, நீலகிரி மாவட்டம் தேவாலா, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, கோழிப்போர்விளை, சிவகங்கையில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது” இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.