தமிழகத்தில் ஜன.15 முதல் வறண்ட வானிலை!

தமிழகத்தில் ஜன.15 முதல் வறண்ட வானிலை!
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி முதல் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஜன.13) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 முதல் 18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து, நாலுமுக்கில் தலா 7 செமீ, காக்காச்சி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 5 செமீ, கோடநாடு, கோத்தகிரி, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜன.15 முதல் வறண்ட வானிலை!
‘‘மொழிக்காக உயிரையும் தந்த தியாக மறவர்களை கொண்ட இயக்கம் திமுக’’ - முதல்வர் ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in