வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
Updated on
2 min read

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (பிப்.25) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கோயம்புத்தூர் மாவட்டம் சின்கோனா, உபாசியில் தலா 3 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இது, கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும். இதுதவிர, தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (பிப்.24) இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்.25-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்.26, 27, 28 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 1-ம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும்.

பனிமூட்டம்: தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் (பிப்.24, 25) அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: பிப்.24-ல் தென் கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு- மத்திய மேற்கு- மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும்பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in