

திருநெல்வேலி: “தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்” என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எந்த ஆபத்து வந்தாலும் எதிர்கொள்ளும் உறுதி மதிமுகவுக்கு மட்டுமே இருந்தது. பொதுப் பிரச்னைகளில் எங்களைப் போன்று வேறு எந்தக் கட்சியும் பாடுபடவில்லை.
திமுக எங்களை மிரட்டுவது போன்று நடத்தி, உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தம் செய்தது. இப்போது குதிரை பேரம் பற்றி பேசுகிறது. ஆனால், அதை ஆரம்பித்ததே திமுகதான். எங்கள் கட்சியை சேர்ந்த கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, நான்காவது நாளே திமுகவில் சேர்த்தனர்.
முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகள் கூட்டம் மிகவும் கண்ணியமாக நடைபெற்றது. அனைவரும் மனம் திறந்து பேச வேண்டும் என்று முதல்வர் கூறினார். அங்கு நடந்த விவாதங்களை வெளியில் பேசுவது முறையல்ல.
தற்போது ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் ஊழல் கொடிகட்டிப் பறந்தது. அந்த ஊழலை தற்போது முதல்வர் இல்லாமல் ஆக்கியுள்ளார். முன்பைவிட தற்போது முதல்வருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளும் விஜய் ஆட்சிதான் நடைபெறும். அடுத்த தேர்தலிலும் அவரே வெற்றி பெறுவார். மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சி ஆகிய கொள்கைகளில் அவர் உறுதியாக இருக்கிறார்.
திமுக கூட்டணியில் இருந்தபோது ஏன் இதை பேசவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது பேசியிருந்தால் மறுநாளே கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்போம். மற்ற கூட்டணிக்கு சென்றிருந்தால் அதையும் விமர்சித்திருப்பார்கள். மற்ற கட்சிகளுக்கு தனிச் சின்னத்திலும் அதிக தொகுதிகளும் வழங்கப்பட்டன. 32 ஆண்டுகளாக எங்கள் கட்சியை நடத்தி வருகிறோம். பல கட்சிகள் தொடங்கி மறைந்துவிட்டன. தமிழக வெற்றி கழகத்தையும் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாகவே பார்க்கிறேன்.
விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியதற்கு ஒவ்வொரு காரணம் உள்ளது. எங்களை திமுகவினர் மோசமாக நடத்தினார்கள். அதனால்தான் வெளியேறினோம். விலகிச் சென்றவர்களை விமர்சிப்பது என் வழக்கமல்ல. சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வன், ராஜேந்திரன் ஆகியோர் வாழ்க. அவர்கள் என் முதுகில் குத்தவில்லை.
என் நெஞ்சில்தான் குத்திவிட்டார்கள். உயிரை கொடுக்கும் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள்தான் கட்சியை காப்பாற்றுவார்கள். இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். முதல்வர் விஜய்யிடம் ஒரு தனி வசீகரம் உள்ளது. பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் அவரை ஆதரிக்கிறார்கள்” என்று வைகோ தெரிவித்தார்.