

நயினார் நாகேந்திரன் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை: எடப்பாடி பழனிசாமியிடம் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரையில் மார்ச் 1-ல் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் மார்ச் 1-ல் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியாகியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பணிகள் முடிந்த பிறகு திறக்கப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் கௌரவ விரிவுரையாளர்களுக்கு நல்லது செய்வோம் என தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். அதை நிறைவேற்றவில்லை. தூய்மை பணியாளர்களை போராட வைத்து தெருவில் நிறுத்தி விட்டு தற்போது சாப்பாடு போடுகிறார்கள். போராட்டம் நடத்துபவர்களிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி, எப்படியாவது அடித்து பிடித்து ஆட்சியை பிடித்து கூட்டணி அமைச்சரவை இல்லாமல் நானே முதல்வராகி நல்லது செய்கிறேன் எனச் சொல்லி சமாளித்து வருகிறார்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கொடுப்பது ஒத்துவராது என முதல்வர் தெரிவித்துள்ளார். கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு ஏதாவது காரணம் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது. எதற்காக டெல்லி சென்று கனிமொழி ராகுல் காந்தியை பார்க்க வேண்டும். எதற்காக கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முதல்வர் பேச வேண்டும். எதற்காக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் 2026 தேர்தல் பற்றி பேச வேண்டும். எல்லாம் பார்க்கும்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளது தெரிகிறது.
நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி. அவரிடம் நாங்கள் ஆட்சியில் பங்கு எதுவும் கேட்க மாட்டோம். அது பற்றி நாங்கள் கேட்கவும் இல்லை, அவர்கள் தரமாட்டோம் என்றும் சொல்லவில்லை. தேமுதிகவிடம் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
சசிகலா புதிய கட்சி தொடங்கினால் அதிமுக ஓட்டுக்கள் பிரியுமா எனக் கேட்கிறார்கள். நாங்கள் யாரையும் கஷ்டப்பட்டு கூட்டணியில் சேர்க்கவில்லை. ஒவ்வொரு எம்ஜிஆர் தொண்டனும் திமுகவை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளான். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. பல மாற்றங்கள் வரும்.
இவ்வாறு அவர் கூறினார். ``மாநில பொதுச் செயலாளர்கள் ராம.சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் கதலி நரசிங்கபெருமாள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.